கலிபோர்னியா : பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஜுலை மாதம் பிரான்சில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜுவான் கேபிஸ்ட்ரானோவில் 2024ஆம் ஆண்டுக்கான தி டென் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் ஆடவர் பிரிவில் 10 ஆயிரம் மீட்டருக்கான ஓட்டப்பந்தையத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தார். 10 ஆயிரம் மீட்டர் பந்தய தூரத்தை குல்வீர் சிங் 27 நிமிடம் 41 புள்ளி 81 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்க வென்றவரான குல்வீர் சிங், இதன் முலம் 16வது ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புது வரலாறு படைத்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இதே பிரிவில் சுரேந்திரா சிங் என்ற தடகள வீரர் 10 ஆயிரம் மீட்டர் பந்தய தூரத்தை 28 நிமிடம் 2 புள்ளி 89 விநாடிகளில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை குல்வீர் சிங் முறியடித்து உள்ளார். இருப்பினும், பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான தகுதியை குல்வீர் சிங் கோட்டை விட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 27 நிமிடம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், அதை 41 விநாடிகளில் குல்வீர் சிங் நழுவ விட்டார். மற்றொரு இந்திய வீரர் கார்திக் குமார் 28 நிமிடம் 1 புள்ளி 90 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 9வது இடத்தை பிடித்தார். மேலும், சுரேந்திரா சிங்கின் தேசிய சாதனையையும் கார்திக் நூலிழையில் முறியடித்து வரலாறு படைத்தார்.
மற்றொரு இந்திய வீரர் அவினேஷ் சேபிள், 15வது சுற்றில் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி 32 நிமிடம் 2 புள்ளி 8 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 20வது இடத்தை பிடித்தார். மேலும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் நழுவவிட்டார்.
இதையும் படிங்க : "அதிபராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாட்டில் ரத்தக்களரி ஏற்படும்" - டிரம்ப் எச்சரிக்கை!