தேனி : சிங்கப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு பிரதமர், தமிழக முதலமைச்சர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பழ சிற்பி கலைஞரான இளஞ்செழியன், முக்கிய பிரபலங்கள் மற்றும் சாதனை படைத்தவர்களின் உருவங்களை பழங்களில் சிற்பமாக வரைந்து அவர்களுக்கு பாராட்டை தெரிவிப்பார்.
அதேபோல் குகேஷ் வெற்றியைக் கொண்டாடும் வகையில், செஸ் போர்டின் மீது தர்பூசணி பழத்தை வைத்து அவரின் உருவத்தை வரைந்து, அதில் இளம் வயது உலக செஸ் சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் எழுதி குகேஷ்-க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உலக செஸ் சாம்பியன்; "குகேஷ் ஊர் திரும்பும்போது பெரிய அளவில் விழா எடுப்போம்" - பள்ளி தலைமை ஆசிரியர் பெருமிதம்!
குகேஷ் வெற்றியின் சுருக்கம் : சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship 14 சுற்றுகளைக் கொண்டது. இந்த போட்டியில் 7.5 புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வர். அந்த வகையில், போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2வது சுற்று டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற 11வது சுற்றில் குகேஷும், 12வது சுற்றில் டிங் லிரெனும் வெற்றி பெற 13வது சுற்று டிராவில் முடிந்தது.
இதன் காரணமாக 6.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். இறுதியாக நடைபெற்ற 14 வது சுற்றில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த குகேஷ், டிங் லிரெனை தோற்கடித்து 7.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.