பிரிஜ்டவுன்: 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பையை வென்றது. வெற்றியை தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.
இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி, 76 ரன்கள் குவித்து தனது பழைய பார்முக்கு திரும்பினார். கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் மொத்தமாக 75 ரன்கள் மட்டும் எடுத்திருந்த விராட் கோலியை பலரும் விமர்சித்த நிலையில் இறுதிப் போட்டியின் ஒரே ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்து தன்னை விமர்சித்த அனைவரது வாயையும் மூடினார்.
விராட் கோலியின் அபார ஆட்டத்தை தொடர்ந்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வெற்றியை தொடர்ந்து பேசிய விராட் கோலி, "இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை, இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். இது இந்தியாவுக்காக விளையாடும் எனது கடைசி டி20 ஆட்டம், நான் விளையாட விரும்பிய கடைசி உலகக் கோப்பை.
இதுவே எங்களின் நோக்கமாக இருந்தது. நாங்கள் ஐசிசி போட்டியில் வெற்றி பெற விரும்பினோம், கோப்பையை வெல்ல விரும்பினோம். அதை ரகசியமாக பாதுகாத்தும் வந்தோம். ஒருவேளை தோற்று இருந்தால் இதை அறிவித்து இருக்க மாட்டேன். தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, "இது தான் எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
டி20 பார்மட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் இது தான் சரியான தருணம் என எண்ணுகிறேன். அதையே தான் நானும் விரும்பிகிறேன். கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன்" என்று தெரிவித்தார். ஒரே நேரத்தில் இரண்டு ஜாம்பவான்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த நிலையில், அதற்கு சச்சின் தெண்டுல்கர், தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்பிளே, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று தந்தவருமான எம்எஸ் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. என் இதயத் துடிப்பு அதிகரித்தது, அமைதியாக இருப்பது, தன்னம்பிக்கை மற்றும் நீங்கள் செய்ததைச் செய்ததால் நன்றாக முடிந்தது.
மீண்டும் உலகக் கோப்பையை வென்றதற்காக இந்தியா மற்றும் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களின் சார்பில் ஒரு பெரிய நன்றி. விலை மதிப்பற்ற பிறந்தநாள் பரிசு வழங்கியதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சமூக வலைதள பக்கத்தில், 20 ஓவ உலக கோப்பையை வென்றதன் மூலம் நாடு 4வது நட்சத்திரத்தை பெற்றுள்ளதாகவும், 1983, 2011 இரணடு 50 ஓவர்கள் உலகக் கோப்பை 2007 டி20 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி மற்றொரு உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அணி வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாகவும், 2023 உலக கோப்பையை இழந்த போதும், வீரர்கள் உற்சாகமாக செயல்பட்டு மீண்டும் ஒரு உலக கோப்பை வென்ற இருப்பது பாராட்டத்தக்கது என்றும் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது எப்படி? - India Won T20 World Cup