சென்னை: 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான தினேஷ் கார்த்திக், பல்வேறு போட்டிகளில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போதுவரை விளையாடிவரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார்.
இதுவரை 247 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்திக், 4606 ரன்களை குவித்துள்ளார். விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் வலம் வந்த கார்த்திக், நடப்பு ஐபிஎல் 2024 தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
17 சீசனாக ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் அவர் டெல்லி, ஆர்சிபி, கேகேஆர், மும்பை, குஜராத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளார். இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த ஊரான சென்னையில் இருந்து கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாமல் போனது குறித்து பேட்டி ஒன்றின் மனம் திறந்து பேசியுள்ளார், கார்த்திக்.
இது குறித்து தமிழக வீரர் அஸ்வினுக்கு அளித்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது, 'நான் வாழ்வில் 2 விஷயங்களுக்காக மட்டும் இப்போதும் வருந்துகிறேன். அதில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்த ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்ததுதான்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2013ஆம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது, மும்பை அணியில் நம்பர் 3 வீரராக விளையாடினேன். மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் என்னை தக்க வைக்க விரும்பியது. ஆனால், நான் அங்கிருந்து வெளியே வந்தேன்.
மும்பை அணி ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள். அங்கு இருந்திருந்தால் எனது கிரிக்கெட் பாதையும் முன்னேற்றம் கண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அதனை தவறவிட்டேன். மற்றொரு விஷயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாததுதான். சென்னை அணி நிர்வாகம் ஒவ்வொரு முறையும் என்னை ஏலத்தில் வாங்க முயற்சிப்பார்கள். அதற்காக என்றும் மரியாதை இருக்கிறது.
நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். இந்தியா ஏ அணிக்காகவும், தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் வி.பி.சந்திரசேகர்தான் என்னை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.
எனவே சென்னை சூப்பர் கிங் அணியின் ஒரு அங்கமாக இருந்த அவர், என்னை ஐபிஎல் தொடரிலும் தேர்வு செய்வார் என்று நினைத்தேன். இருப்பினும், கடைசியில் அவர் தோனியை வாங்கியதால், நான் எப்போதும் சிஎஸ்கே அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை உணர்ந்தேன்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜடேஜாவின் சூழலில் சிக்கிய கேகேஆர்..3 வது வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்! - ipl 2024 csk vs kkr