ராஞ்சி: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சற்று தடுமாறிய இங்கிலாந்து அணியை ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் நல்ல நிலைக்குக் கொண்டு வந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் துரூவ் ஜுரல் 90 ரன்கள் சேர்த்துத் தடுமாறிய இந்திய அணியை ஓர் அளவிற்கு ரன்கள் சேர்க்க உதவினார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் துருவ் ஜுரல் தனது முதல் அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.
இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துத் தடுமாறி இருந்த போது தான் துருவ் ஜுரல் களத்திற்கு வந்தார். தனது முழு செயல்திறனால் இந்திய அணியை ஓர் நல்ல ரன்களை எடுக்க உதவியாக இருந்தார். இவரது இந்த அபார ஆட்டம் பலரையும் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இவரை முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியோடு ஒப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கிரிக்கெரட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது" இவ்வாறு சுனில் கவாஸ்கர் துருவ் ஜுரலை பாராட்டியுள்ளார்.
இதே போல் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "எந்த மீடியா விளம்பரமும் இல்லை. எந்த டிராமாவும் இல்லை. சில சிறந்த செயல்திறனை இக்கட்டான சூழ்நிலையில் அமைதியாக வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள் துருவ் ஜுரல்" என பதிவிட்டுப் பாராட்டி உள்ளார். மேலும், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலி! இந்தியாவிலேயே கோலி தான் முதல் ஆளாம்! என்ன தெரியுமா?