டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்.24) அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இன்னிங்ஸ்ஸைத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர் - மெக்குர்க் - பிருத்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். பிருத்வி ஷா, வந்த முதல் பந்திலே பவுண்டரியை விளாசினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சந்தீப் வாரியர் பந்தைச் சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
களத்தில் அக்சர் பட்டேல் - ஷாய் கோப் ஜோடி விளையாடியது. ஷாய் கோப் வெறும் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவர் ப்ளேவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் களமிறங்கினார்.
இருவரும் இணைந்து அணிக்கு ரன்களைக் குவித்தனர். 10 ஓவர் முடிவிற்கு 80 - 3 என்ற கணக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடியது. சிறப்பாக விளையாடி, அக்சர் பட்டேல் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். அக்சர் படேலிடம் ரன்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17வது ஓவரில் நூர் அகமது பந்தைச் சமாளிக்க முடியாமல் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அக்சர் பட்டேல் 43 பந்துகளுக்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) களம் கண்டார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். 18 ஓவர் முடிவிற்கு 171- 4 என்ற கணக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாட, 19வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மாறி மாறி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார்.
20வது ஓவரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் ஓவரின் 5 பந்துகளில் 4 பந்துகளை சிக்ஸரும், ஒரு பந்தை பவுண்டரி லைனுக்கும் விளாசி மோகிட் சர்மா ஓவரில் 31 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி குவித்தது.
இதில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 88 ரன்களும், அக்சர் பட்டேல் 66 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களும் குவித்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் வாரியர் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையும் படிங்க: மாஸாக விளையாடிய மார்கஸ்.. சிஎஸ்கேவை சிதறடித்து புள்ளிப் பட்டியலில் முன்னேறி லக்னோ அணி! - CSK Vs LSG