டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவது பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.27) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 43வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் இன்னிங்சை ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜேக் ப்ரேசர், மும்பை பந்துவீச்சை விளாசி தள்ளினார்.
அபாரமாக விளையாடிய ஜேக் ப்ரேசர் நாலாபுறமும் பந்துகளை விரட்டி குழுமியிருந்த உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக அபிஷேக் போரலும் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடியை ஒரு வழியாக பியூஷ் சாவ்லா பிரித்தார். அவரது பந்தில் ஜேக் ப்ரேசர் 27 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்சர் என மொத்தம் 84 ரன்கள் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அபிஷேக் போரல் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் சீரான இடைவெளியில் ரன்களை வாரிக் குவித்து வந்தனர். சாய் ஹோப் 41 ரன், ரிஷப் பன்ட் 29 ரன் என தங்களது பங்களிப்பை வழங்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ரன் வேகத்தை சீரான இடைவ்வெளியில் உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களும், அக்சர் பட்டேல் 11 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
நடப்பு சீசனில் டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு இருக்கும் மும்பை அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். 257 ரன்கள் எட்டி மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2024; டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு! - Delhi Vs Mumbai