சென்னை: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு தற்போது மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நேற்று மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று நடக்கவிருந்த போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை, பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
14 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிகர ரன் ரேட் + 0.528 ஆகும். சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு சென்னை தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஒருவேளை பெங்களூரு அணி 200 ரன்கள் குவித்து, சென்னை அணி 18 ரன்னுக்கு குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் பெங்களூரு அணியைவிட சென்னை அணியின் நிகர ரன் ரேட் கூடுதலாக இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்றே தெரிகிறது.
பிளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் விக்னேஷை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், "12 புள்ளிகளுடன் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி + 0.387 நிகர ரன் ரேட்டுடன் உள்ளது.
அந்த அணி சென்னைக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ, இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தாலோ சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட முடியும்.
15 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் அணி +0.406 என்ற நிகர ரன் ரேட்டில் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.ஹைதராபாத் அணி, எஞ்சியுள்ள ஒரு லீக் போட்டியில் வெற்றி பெற்றால் 2வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் இருக்கிறது. டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. நிகர ரன் ரேட்டில் (-0.377) பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதேபோல் மழையால் ஆட்டம் நடைப்பெறாமல் போனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அப்படி வழங்கப்படும்பட்சத்தில் அது சென்னை அணிக்கே சாதகமாக அமையும்" என்றுதெரிவித்துள்ளார் விக்னேஷ்.
இதையும் படிங்க: இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு! எப்போது தெரியுமா? - Sunil Chhetri Announce Retirement