சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காசிமா என்ற கல்லூரி மாணவி அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் போர்டு உலக கோப்பை போட்டியில் பங்கேற்று ஒற்றையர், இரட்டையர், குழு ஆகிய மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தங்கப் பதக்கங்களுடன் நாடு நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருடைய சொந்த மண்ணான வடசென்னையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்த போது ராயபுரத்தில் இருந்து அவருக்கு ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராயபுரம் பகுதியில் திறந்தவெளி காரில் வந்து கொண்டிருந்த காசிமாவிற்கு மேள தாளங்களோடு மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தங்கப் பதக்கம் பெற்று சொந்த மண்ணிற்கு திரும்பிய காசிமாவிற்கு ஆர்கே நகர் பகுதி திமுக சார்பில் தண்டையார்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை அருகே மேடை அமைத்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் உள்ளிட்டோர் சார்பில் காசிமாவிற்கு மாலை அணிவித்து பரிசு வழங்கினர்.
இதேபோல் புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோவில் தெருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேண்ட் வாத்தியங்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற காசிமாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் காசிமாவை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு லட்ச ரூபாய் நிதியை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மூலம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உலக கோப்பை கேரம்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு உற்சாக வரவேற்பு!