தர்மசாலா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.5) தர்மசாலாவில் நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும், டேரி மிட்செல் 30 ரன்களும் எடுத்தனர்.
தோனி உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து 168 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் தொடக்க வீரர் ஜானி பெர்ஸ்டோவ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் பஞ்சாப் அணி சற்று அழுத்தத்திற்கு உள்ளானது. இந்நிலையில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷஷாங் சிங் இணை ஜோடி அமைத்து அணியின் சரிவில் இருந்து மீட்டது. சிறிது நேரம் நீடித்த ஷஷாங் சிங் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பிரம்சிம்ரன் சிங்கும் தன் பங்குக்கு 30 ரன்கள் குவித்த கையோடு அவுட்டானார். இதன் பின் ஆட்டம் மெல்ல சென்னை அணி பக்க திரும்பத் தொடங்கியது. சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
கேப்டன் சாம் கரன் 7 ரன், ஜித்தேஷ் சர்மா டக் அவுட், அசுதோஷ் சர்மா 3 ரன், ஹர்ஷல் பட்டேல் 12 ரன், ராகுல் சஹர் 16 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணியால் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பைதக்கவைத்துக் கொண்டது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ரன் குவிப்பு மற்றும் பந்துவீச்சு என அபாரமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதையும் படிங்க: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை வீரர் மதிஷா பத்திரனா திடீர் விலகல்! என்ன காரணம்? - Matheesha Pathirana Ruled Out CSK