சென்னை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.8) இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 22வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் பிலிப் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்பே அந்த அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. துஸார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே பிலிப் சால்ட், ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து அங்கிருஷ் ரகுவன்ஸி, மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேனுடன் கைகோர்த்தார். சுனில் நரேன் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். மறுமுனையில் அங்கிருஷ் ரகுவன்ஸி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 24 ரன்களில் ரவீந்திர ஜடேஜா ஓவரில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டிய சுனில் நரேனை குறிவைத்து ஜடேஜா காலி செய்தார். அவரது பந்தில் நரேன் (27 ரன்கள்) மிகிந்த திக்சேனாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
வெங்கடேஷ் ஐயர் 3 ரன், ரமன்தீப் சிங் 13 ரன், ரின்கு சிங் 9 ரன், அதிரடி ஆட்டக்காரர் ஆந்திரே ரஸ்செல் 10 ரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். நீண்ட நேரம் தாக்குபிடித்த ஸ்ரேயஸ் ஐயரும் (34 ரன்) கடைசி ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அன்குல் ராய் 3 ரன்னும், வைபவ் அரோரா 1 ரன்னுடம் களத்தில் நின்றனர். சென்னை அணி தரப்பில் துஸார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டும், மகிஷ் தீக்ஷேனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 138 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க : CSK Vs KKR: டாஸ் வென்று சென்னை பந்துவீச்சு தேர்வு! கொல்கத்தா ஆதிக்கம் தொடருமா? - IPL 2024