அடிலெய்டு: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. பகலிரவு ஆட்டமாக (பிங்க் பால்) நடைபெற்ற இப்போட்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியா 337 ரன்களை எடுத்தது.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 175 ரன்களில் சுருண்டது. 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்த எளிய இலக்கை எட்டி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
குறிப்பாக, ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தில் கூடுதல் ரன்கள் எடுக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களின் நம்பி்க்கை தகர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பந்துவீச்சு. அவர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக் முடியாமல், ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மீதமிருந்த 5 விக்கெட்களையும் இந்தியா பறிகொடுத்தது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரவிசந்திரன் அஸ்வின் -7, ஹர்ஷத் ரானா -0 மற்றும் முகமது சிராஜ் - 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்களை அடித்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 13 ஆவது முறையாகும்.
அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 141 பந்துகளில் 140 ரன்களை குவித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் ஐஐசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 14 ஆம் தேதி பிரிஸ்பைனில் தொடங்க உள்ளது.