ஐதராபாத்: கடந்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்து ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து சரிந்துள்ளது.
இக்கட்டான நிலையில் சீனியர் வீரர்கள்:
இதனிடையே இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பதனால் இந்த ஆஸ்திரேலிய தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை பிசிசிஐ தரப்பில் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி:
அதாவது ஆஸ்திரேலியா தொடரில் ஒருவேளை இந்திய அணி மீண்டும் சொதப்பி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் அடுத்து நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் தற்போது தங்களது கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத பட்சத்தில் அணியின் நிர்வாகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முடிவுகளை எடுக்கும் என எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என பிசிசிஐ வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனியர் வீரர்கள் ஓய்வு முடிவு?:
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் பட்சத்தில் அதுவே சீனியர் வீரர்கள் நால்வருக்கும் கடைசி போட்டியாக இருக்கலாம் என்றும் அதன்பின் அவர்கள் ஓய்வு முடிவு குறித்து யோசிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை வெற்றியோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ரனர்.
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் வெளியேறலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா தொடர் நிச்சயம் கைப்பற்றியாக வேண்டும் என்ற அழுத்தத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: 2 இந்திய வீரர்களை கிழித்து தொடங்கவிட்ட நியூசி. ஊடகங்கள்! யார் யார் தெரியுமா?