ஐதராபாத்: வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய வீரர்களை பட்டியலை பிசிசிஐ கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில், டி20 தொடருக்கான வங்கதேச அணியின் பட்டியல் வெளியாகி உள்ளது.
ஷகிப் அல் ஹசன் ஓய்வு:
நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மெஹிதி ஹசன் மிராஸ் 14 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷகிப் அல் ஹசன் அறிவித்தார்.
கடைசியாக நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரே தனது கடை சர்வதேச டி20 போட்டி என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், டாக்காவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கான்பூர் டெஸ்டே கடைசியா?
தென் ஆப்பிரிக்கா - வங்கதேச டெஸ்ட் தொடர் நடக்காத பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ஷகிப் அல் ஹசனின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது. மற்றபடி தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹுசைன் எமன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரகிபுல் ஹசன் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் இந்தியா - வங்கதேசம் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 9 ஆம் தேதி டெல்லியில் 2வது போட்டியில், ஐதராபாத்தில் 12 ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய டி20 தொடருக்கான வங்கதே அணி வீரர்கள் விவரம் வருமாறு:
வங்கதேசம்: நஜ்முல் ஹுசைன் சான்டோ (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹுசைன் எமன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்
இதையும் படிங்க: நூற்றாண்டு கிரிக்கெட்டில் இதுதான் முதல் முறை! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வரலாறு! - Ireland Historic Win south africa