பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களிலும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களிலும் ஆட்டமிழந்தது. தொடர்ந்து இராண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கே.எல்.ராகுல் தன் பங்குக்கு 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் சதம் அடிக்க இந்திய அணி 500 ரன்களை அசால்ட்டாக கடந்தது.
Jasprit Bumrah 🤝 Mohd. Siraj!
— BCCI (@BCCI) November 24, 2024
Two early wickets for #TeamIndia as Nathan McSweeney & Pat Cummins depart.
Live - https://t.co/gTqS3UPruo#AUSvIND | @Jaspritbumrah93 | @mdsirajofficial pic.twitter.com/v8KsJqJxO0
முடிவாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 533 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் விராட் கோலி (100 ரன்), நிதிஷ் ரெட்டி (38 ரன்) ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்றனர். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை.
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி, இந்திய கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் டக் அவுட்டாகி வெளியேறினார். மேற்கொண்டு விக்கெட் வீழாமல் இருக்க இந்த முறை முன்கூட்டியே இறங்கிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அநாயசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
முகமது சீராஜ் வீசிய பந்தை அடிக்க வந்த நிலையில், பந்து பேட் கம்மின்ஸின் பேட்டின் நுனியில் உரசி ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த விராட் கோலியின் கையில் தஞ்சமடைந்தது. அற்புதமாக கேட்ச் பிடித்த விராட் கோலி முதல் இன்னிங்சில் தான் தவறவிட்ட எளிதான கேட்ச்க்கு தற்போது பிராயச்சித்தம் செய்து கொண்டார்.
3வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 522 ரன்கள் குவிக்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் வெற்றி யாருக்கு வேண்டுமானுலும் கிடைக்கும் சூழல் நிலவுகிறது.
ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய ஸ்டீவ் சுமித், மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இன்னும் இருப்பதால் இனி இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க: IPL 2025 Auction Live: ஐபிஎல் மெகா ஏலம் தொடக்கம்!