செயிண்டி லூசியா: கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் வருகின்ற ஜூன் 18 உடன் முடிவடைக்கிறது. அடுத்ததாக சூப்பர் 8 சுற்று ஜூன் 19 முதல் தொடங்கப்படவுள்ளது.தற்போது வரை இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மேலும் 2 இடங்களுக்கான போட்டி கடுமையாக நடந்துவருகிறது.
இந்நிலையில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த பிரிவில் அடுத்ததாக தகுதி பெரும் அணி யார் என்பதில் கடுமையான போட்டி நிலவி வந்தது.குரூப் பி பிரிவில் அடுத்ததாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய நிலையில் ஸ்காட்லாந்து அணி இருந்தது.
இந்நிலையில் செயிண்டி லூசியாவில் நடந்த 35வது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் களமிறங்கினர்.ஜோன்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் இணைந்த முன்சே மெக்முல்ல்ன் ஜோடி 88 ரன்கள் அடித்து அணியின் ரன் மதிப்பை உயர்த்தினர்.முன்சே 35 ரன்களில் அவுட்டாக, மெக்முல்லன் அரைசதம் கடந்து 60 ரன்களில் மேக்ஸ்வெல் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் பெர்ரிங்டன் 42 ரன்கள் குவித்து அதிரடி காட்டியதால் ஸ்காட்லாந்து அணியின் 180 ரன்கள் எட்டி வலுவான ஸ்கோரை பதிவு செய்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.அதிரடி ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் மார்ஸ் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல்லும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹெட் மற்றும் ஸ்டோனிஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.ஹெட் 68 ரன்களிலும் ஸ்டோனிஸ் 59 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த டிம் டேவிட் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்பை இழந்து டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அதேசமயம் ஸ்காட்லாந்து அடைந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: கில் மற்றும் ஆவேஷ் கான் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கம் - பிசிசிஐ-யின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?