மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான 21 போட்டிகள் கொண்ட முதல் கட்ட ஐபிஎல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பிளே ஆப் மற்றும் இறுதி போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பின் நடப்பு ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னையின் அணியின் சொந்த மண்ணில் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் இறுதிப் போட்டியை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மே 26ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
முன்னதாக மே 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் முதலாவது தகுதிச் சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மே 20ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறும் நிலையில், ஒருநாள் இடைவெளியில் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
முதலாவது தகுதிச் சுற்று மே 21ஆம் தேதி மற்றும் வெளியேற்றுதல் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2வது தகுதிச் சுற்று மே 24ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக தகவல் கூறப்படுகிறது. இறுதியாக மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிங்க : காவிரி நீர் வீண் விரயம்- ரூ.1 லட்சம் அபராதம் வசூல்! பெங்களூரு குடிநீர் வாரியம் அதிரடி! - Bengaluru Cauvery Water Fine