கிங்ஸ்டன்: 9வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றுக்கான லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகின்றன. இதில், இன்று கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஓப்பன் பேட்ஸ்மேன்களாக இறங்கிய குர்பஸ் மற்றும் இப்ராஹிம் ஜோர்டான் நிதானமான தொடக்கம் தந்தனர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் குர்பாஸ் 60 ரன்களிலும், ஜோர்டான் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய அஜ்மதுல்லா(2), கரீம் ஜனத்(13), ரஷித் கான்(2), முகமது நபி (10) அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தனர். இதனால், இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அதிரடி பேட்ஸ்மேனான ஹெட் விக்கெட்டை நவீன் உல் ஹக் களட்டினார். இதனைத்தொடர்ந்து வார்னர் 3 ரன்களிலும், கேப்டன் மார்ஷ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.
இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் பொறுப்பாக ஆடி 41 பந்துகளில் 59 ரன்கள் அடித்து குல்பதீன் நைப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்டாய்னிஸ்(11), டிம் டேவிட்(2) என யாருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது விக்கெட்டுகளை தொடர்ச்சியாக பறிகொடுத்தது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் குல்பதீன் நைப் 4 விக்கெட்டுகள், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். தனது வேகத்தால் 20 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு உதவிய குல்பதீன் நைப்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: வங்கதேசத்தை காலி செய்த இந்தியா..பாண்டியா அதிரடி அரைசதம்!