சென்னை: 2024 ஒலி்ம்பிக் போட்டிகள் வரும் ஜூலை.26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பிரான்ஸ்ஸில் உள்ள பாரிஸில் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் என்ற வீரர் தேர்வாகி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், TRAP MEN பிரிவில்- பிருத்விராஜ் தொண்டைமான், TRAP WOMEN - பிரிவில் ராஜேஸ்வரி குமாரி ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். மேலும், SKEET MEN பிரிவில் அனன்ஜீத் சிங் நரூகா, SKEET WOMEN பிரிவில் மகேஷ்வரி செளஹான், ரைசா தில்லான் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். SKEET MIXED TEAM பிரிவில் அனன்ஜீத் சிங் நரூகா, மகேஷ்வரி செளஹான் ஆகியோரும் தேர்வாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிருத்விராஜ் தொண்டைமான், இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "போக்குவரத்துக்கு கூட காசு இல்லை" - தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் அவலநிலை! - Wheelchair Cricket