ஐதராபாத்: டென்னிஸ் விளையாட்டின் அதிக மதிப்புமிக்க தொடர்களில் ஒன்றாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் காணப்படுகின்றன. விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் பார்க்கப்படுகின்றன. அப்படி ஆண்டுக்கு நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. தொடர்ந்து மே மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் தொடக்கத்தில் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. ஜூன் பிற்பகுதியில் இருந்து ஜூலை மாத தொடக்கத்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரும், ஆகஸ்ட் பிறபகுதியில் இருந்து செப்டம்பர் தொடக்கத்தின் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபனும் நடைபெறுகின்றன.
இதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரை தவிர்த்து மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. கிரிக்கெட் போன்று டென்னிஸ் போட்டியில் லைன் காலிங் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதில் விதிவிலக்காக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் மட்டுமே உள்ளது. 147 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பழைய நடைமுறையே தொடர்ந்து வந்தது. அதாவது களத்தில் அனைத்து திசைகளிலும் அம்பயர்கள் மற்றும் லைன் நடுவர்கள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பந்தும் மனித இயக்கத்தின் மூலமே கண்காணிக்கப்பட்டு வந்தது.
அதற்காக நடுவர்களுக்கு என பிரத்யேக உடை வழங்கப்பட்டு களத்தில் நிற்கவைக்கப்பட்டு இருப்பர். வெண்ணிலா ஐஸ்கிரீமில் ஸ்டாராபெரி பழத்தை வைத்து இருப்பது போன்று களத்தில் நிற்கும் நடுவர்களை பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும். இந்நிலையில், 2025 டென்னிஸ் தொடரில் இருந்த கள நடுவர்கள் முறையை கைவிட விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்களில் உள்ளது போலவே தொழில்நுட்ப ரீதியில் ஆட்டத்தின் விதிமுறைகளை கண்காணிக்க விம்பிள்டன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் லைன் காலிங், லைன் நடுவர் உள்ளிட்ட பணிகளை இனி நவீன தொழில்நுட்பம் மூலமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த சீசனில் களத்தில் நடுவர்கள் யாரும் நிற்பதை பார்க்க முடியாது என விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 147 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் கொண்டு வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 13 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விராட் கோலிக்கே வாடகைக்கு வீடு கொடுத்த கிரிக்கெட் வீரர்! Virat Kohli rented home from Richest cricketer