திருச்சிராப்பள்ளி: திருச்சி மாநகரின் முக்கிய சின்னமாக மலைக்கோட்டை இருந்து வருகிறது. காவேரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள மலைகோட்டையை தென்கயிலாயம் எனவும் அழைப்பார்கள்.
மலைகோட்டையின் விஷேச நிகழ்வுகளுள் ஒன்று 'கார்த்திகை தீபத் திருநாள்'. அந்த நாளன்று மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலிலும், தாயுமானவர் கோயிலிலும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாயுமானசுவாமி மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு, பின் மாலை 6 மணிக்கு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள ஐந்து அடி உயர செப்புக்கொப்பரையில், 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணிகளை கொண்டு செய்யப்பட்ட திரியால் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய், நெய் ஆகியவைகளை ஊற்றி, மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
அதற்காக, மலைக்கோட்டை தாயுமானசுவாமி சன்னதியில் மிக நீளமான (300 மீட்டர்) திரி தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த திரி தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில் நேற்று (டிசம்பர் 7) மாலை 5 மணிக்கு அந்த திரியை கோயில் பணியாளர்கள் மற்றும் அடியார்கள் பல்லக்கில் சுமந்து சென்றனர்.
பின் அந்த திரிக்கு தீபம்காட்டப்பட்டு, அரோகரா என பக்தி முழக்கத்துடன் பக்தர்கள், அடியார்கள் ஒன்றிணைந்து பக்தி சிரத்தையுடன் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் திரியை 700 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊற வைத்தனர். இதனை தொடர்ந்து, டிசம்பர் 13-ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க: “மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும்” அரசியல் பேசும் மதுரை ஆதீனம்!
இந்த நிகழ்வின் போது திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் நல்லப்படியாக பெரிய நீளத் திரியை கொப்பரையில் வைத்து எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊற வைக்கப்பட்டது.
இந்த கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு முன் ஏற்பாடுகளை, திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா மேற்பார்வையில், அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், அறங்காவலர்கள் கருணாநிதி, கலைச்செல்வி, ஸ்ரீதர், கோவிந்தராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.