கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த நல்லட்டிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான நஞ்சுண்டேஷ்வரர் கோயில் உள்ளது. நஞ்சுண்டேஷ்வரர் என்பது நஞ்சை உண்ட சிவன் எனவும், இந்த கோயிலுக்குச் செல்வதால் தங்களுடைய கால்நடைகள் நோய்கள் மற்றும் விஷ பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும், மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் தீரும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத இறுதியில் மூன்று நாட்கள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு நல்லட்டிபாளையம் கிராமத்தை சுற்றியுள்ள கிணத்துக்கடவு, அரிசிபாளையம், பொள்ளாச்சி, பட்டிணம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
திருவிழா:
தேர்த் திருவிழாவின் முதல் நாளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர். இதில் பெரும்பாலான மாட்டு வண்டிகள் பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வந்தது. இதனை சாலையில் சென்ற அனைவரும் வியப்பாகப் பார்த்தனர்.
200 ஆண்டுகள்:
இதுகுறித்து கோயில் நிர்வாகிகளில் ஒருவரான மணி என்பவர் கூறுகையில், "எங்களுடைய முன்னோர் நஞ்சப்பநாயக்கரால் இக்கோயில் 1886-இல் கட்டப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட நோய் குணமானதைத் தொடர்ந்து மக்கள் இங்கு வழிபட தொடங்கினர். அந்த காலத்தில் கோயில் தேர் திருவிழா நடைபெறும் போது பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு ஜமீந்தார்கள் வந்து தங்கி தேர் திருவிழாவை பார்த்துவிட்டு வழிபாடு மேற்கொள்வார்கள்.
கோயிலுக்கு எங்களுடைய மூதாதையர்கள் 240 ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளனர். தனியார் நிர்வகிக்கும் கோயிலாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வழிபாடுகள் மேற்கொள்வார்கள். தங்களுடைய நோய்கள் குணமாக உப்பு, மிளகு வாங்கி சாமிக்கு வழிபாடு மேற்கொள்வார்கள். அவ்வாறு செய்தால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. அதனால் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கதைத் தொடர்கிறது," என தெரிவித்தார்.
மாட்டு வண்டியில் செல்வது கோயிலின் சிறப்பு:
இது குறித்து அரிசி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சிவராம் கூறுகையில்,"நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டால் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகாது. விஷப்பூச்சிகள் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படாது என்பது ஐதீகம்.
அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக மாட்டு வண்டியில் வந்து கோயிலில் வழிபாடு மேற்கொள்கின்றனர். தற்போது நவீன மயமான இந்த காலகட்டத்திலும் மாட்டு வண்டியில் வந்து வழிபாடு மேற்கொள்வதே இந்த கோவிலின் சிறப்பு.
அந்த காலகட்டத்தில் உழவு பணிக்காகவும், விவசாய பொருட்களைக் கொண்டு செல்லவும் காளை மாடுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் தேவையும் அதிகமாக இருந்தது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன பெருக்கம் அதிகமான நிலையில் மாட்டு வண்டிகளும் குறையத் தொடங்கியது.
மாடு வளர்ப்பிற்கு ஆட்கள் இல்லாமல் போனது, தீவன பற்றாக்குறை, சவாரி வண்டிகள், கட்டை வண்டிகள் இல்லாமல் போனது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மாடு வளர்ப்பு அதிகமாகியுள்ளது. பாசத்திற்காகவும், ரேக்ளா பந்தயத்திற்காகவும் இப்பகுதி மக்கள் காளைகளை வளர்க்க தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 500 கிடாய்கள் வெட்டி கறி விருந்து.. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மணிக்கட்டி மாடசாமி கோயில் திருவிழா!
மேலும் மாட்டு வண்டிகளையும் நகரத்தில் உள்ளவர்கள் அதிசயமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் காளை வளர்ப்பில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. காளையின் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு எவ்வாறு வைத்தியம் பார்ப்பது, சாலையில் செல்வதால் மாடுகளின் குளம்பு தேயாமல் இருக்க லாடம் கட்டும் பணியாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு சிரமங்கள் உள்ளது. மேலும், மாட்டு வண்டிகள் செய்வதற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். அது போல் காளைகளுக்கு தேவையான உணவுகள், பயிற்சிகள் வழங்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.