தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர்..! கோவிந்தா..என ஆரவாரத்துடன் எதிர்சேவை செய்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை - kallalagar ethir sevai - KALLALAGAR ETHIR SEVAI
Chithirai festival - Kallazhagar Ethir Sevai: திருமாலிருஞ்சோலையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்றுமாவடி அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்பு அளித்தனர்.
Published : Apr 22, 2024, 1:20 PM IST
மதுரை: 'தென் திருப்பதி' என்று புகழப்படுவதுடன், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திருமாலிருஞ்சோலை விளங்குகிறது. மதுரை மாவட்டம், அழகர்கோயில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலின் 'சித்திரை திருவிழா' கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், சுந்தராஜபெருமாள் 'கள்ளழகர்' (Kallazhagar) வேடம் பூண்டு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக, தங்கப்பல்லக்கில் அழகர் மலையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.
பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கண்ணனேந்தல் வழியாக மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, தங்கப்பல்லக்கில் இன்று (திங்கட்கிழமை) காலை எழுந்தருளிய கள்ளழகரை, பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்ற எதிர்சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த எதிர்சேவையின் போது, கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க, கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி, கருப்பசாமி மற்றும் அனுமன் வேடமிட்ட பக்தர்கள் ஆடல், பாடல்களுடன், கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில், தோல் பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா..கோவிந்தா' என பக்தி கோஷங்களுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு வரவேற்றனர். அப்போது பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி பக்தியுடன் கள்ளழகரை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மூன்றுமாவடியில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் சர்வேயர் காலனி, புதூர், டி.ஆர்.ஓ.காலனி உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் மாலை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருள்கிறார். அழகர்கோயில் புறப்பாடு முதல் மீண்டும் கோயிலுக்கு திரும்புவது வரை, சுமார் 480 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.
இன்று இரவு தல்லாகுளம் அம்பலகாரர் மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர், நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று, ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார்.
அதனைத் தொடர்ந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி, நாளை (புதன்கிழமை) அதிகாலை வெள்ளி குதிரை வாகனத்தில் வீர ராகவ பெருமாளை வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை காலை ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, மதுரை மாநகர் பகுதியில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை.. மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது! - Madurai Chithirai Festival