தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, பெரிய கோயிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. சந்திரசேகர், பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார்.
இதனையடுத்து, பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு மஹாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை பெருவிழாவில் காலை, மாலை வேளைகளில் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கட்டிய அணைகள் எத்தனை? - அன்புமணி ராமதாஸ் கேள்வி - Anbumani Ramadoss