தஞ்சாவூர்: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்த விழாவின் மிக முக்கியமான அம்சமாக திகழ்வது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவதாகும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நவராத்திரி பண்டிகை, கடந்த 3ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறும் இப்பண்டிகையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொலு பொம்மைகளை தங்களது வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டிற்காக வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி அவற்றில் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் மற்றும் பொம்மைகளை கொலுவாக வைத்து வழிபடுவது வழக்கம்.
அதில் ஒருபகுதியாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் நவராத்திரியை முன்னிட்டு வாசவி மகளிர் குழு சங்க உறுப்பினர்கள் சார்பில் ஆண்டுதோறும் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் வாசவி மகளிர் சங்க உறுப்பினர்கள் ஒன்றுன் சேர்ந்து புதுமையான முறையில் கொலு கண்காட்சியை அமைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கொலு வழிபாட்டின் தொடக்கமாக மகளிர் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து லலிதா சகஸ்ரநாமா வழி லெட்சார்சணை செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, அனைவரும் பாட்டுப்பாடி தீபாரதனை காட்டி நவராத்திரி விழா கொலு வழிபாட்டை வெகு சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியெல்லாம் கொலு வைக்க முடியுமா? நவராத்திரி கொலுவுக்காக வீட்டையே அர்ப்பணித்த திருநெல்வேலி குடும்பம்!
இந்த கொலு கண்காட்சியில், பட்டுக்கோட்டையில் தாமிரபரணி என்கிற கொலு அமைப்பில், நெல்லை மாவட்டத்தின் சிறப்பான தாமிரபரணி ஆறு மற்றும் அந்த ஆற்றின் ஒரு கரையில் நவ திருப்பதியும், மற்றொரு கரையில் நவ கைலாயமும் இருப்பதுபோல அமைத்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, நவ திருப்பதி மற்றும் நவ கைலாயத்தை ஒருசேர ஒரே இடத்தில் தத்ரூபமாக அமைத்துள்ள விதமும் இவற்றுக்கு இடையே தாமிரபரணி ஆறு தத்ரூபமாகவே ஓடுவது போன்ற பட்டுக்கோட்டையில் தாமிரபரணி என்கிற கொலு அமைப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்