ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் 3 வது பதவிக்காலம் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் துரிதமான சில முடிவுகளுடன் துவங்கியிருக்கிறது. தெற்காசிய நாடுகளின் தலைவர்களை பதவியேற்பிற்கு அழைத்ததன் மூலம் , வெளிநாட்டு கொள்கைகளில் முன்முனைப்பான நடவடிக்கைகள் தொடரும் என அவர் கூறியிருக்கிறார். பதவியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி புறப்பட்டுச் சென்றார். 3வது முறையாக பிரதமராக தேர்வான பின்னர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜி7 மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு என்பது தேசம் முக்கிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வருவதை உணர்த்துவதோடு, மேற்குலக நாடுகளுடனான உறவிலும் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.
ஜி7-ம் இந்தியாவும்: இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது அந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. பனிப்போர் காலத்தில் ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் தாராளமய பொருளாதார கொள்கையைக் கொண்டிருந்த நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தன. இந்நாள் வரையிலும் அந்த நாடுகளின் கூட்டமைப்பு தொடர்கிறது, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. உலகப் பொருளாதாரத்தில் முதல் 5 இடங்களுக்குள் இருந்தாலும் இந்தியா ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பெறவில்லை, நமது தேசம் இன்னமும் வளரும் நாடாகவே கருதப்படுகிறது.
சமீப வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் கவர்ச்சிகரமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பலதுருவ அரசியலைக் கொண்டுள்ள உலக ஒழுங்கைப் பேணுவதில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது. ஜி7 கூட்டமைப்பில் முழு உறுப்பினராக இல்லை என்றாலும் வெளித்தொடர்பு நாடு (Outreach Country) என்ற முறையில் அழைப்பைப் பெறுகிறது. இதுவரையிலும் 11 ஜி7 கூட்டங்களில் இந்தியா பங்கேற்றுள்ளது, இவற்றில் 5 முறை தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜி7 நாடுகளுடன் இந்தியா வளரும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே இந்நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு (bilateral and multilateral platforms) தளங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகிறது.
ஜி7 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனியின் தலைவர் ஓலஃப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரான் போன்றோருடன் பிரதமர் மோடி பல பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இத்தாலி பிரதமருடனான பேச்சுவார்த்தையில், தூய எரிசக்தி, உற்பத்தி, விண்வெளி, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடனான பேச்சுவார்த்தையின்போது உலகளாவிய சிறப்பு யுக்தி கூட்டாண்மை Special
(Strategic Global Partnership) குறித்து விவாதிக்கப்பட்டது. மும்பை - அகமதாபாத் அதிவிரைவு ரயில் சேவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தோடு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு தடையில்லா வர்த்தக உடன்பாடடில் (bilateral free trade agreement) இருநாடுகளும் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன. இங்கிலாந்தைப் பொறுத்தவரையிலும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பின்னர், இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் பொருளாதார உறவை செறிவுபடுத்திக் கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தடையில்லா வர்த்தம் தொடர்பாக இரு தலைவர்களும் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அதோடு போப் பிரான்சிஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் உரையாடல் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்ட பின்னர் சுருக்கமான உரையாடல் ஒன்று நடைபெற்றது. போப் ஆண்டவர் இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் ஜனநாயக வலிமையைக் காட்ட ஜி7 மேடையை பயன்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி, சமீபத்திய தேர்தலில் செய்யப்பட்ட பிரமாண்ட ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். ஜி7 நாடுகளில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்றவையும் நடப்பு ஆண்டில் தேர்தலை எதிர்கொள்கின்றன. அமெரிக்க அதிபர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோர் தங்களின் முதல் ஆட்சிக்காலத்தில் இருக்கும் நிலையில், கடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையை (anti-incumbency) எதிர்கொள்கின்றனர். ஆனால் மறுபுறம் இந்திய பிரதமர் மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேர்தலின் முடிவுகள் “ஒட்டுமொத்த ஜனநாயக உலகுக்கும் கிடைத்த வெற்றி” என குறிப்பிட்டார்.
சீனாவும் சிக்கல்களும்: ஜி7 நாடுகள் இந்தியாவின் மத்திய கிழக்கு - ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை ஆதரித்த அதே நேரத்தில் உலக அரசியலில் சீனாவின் நிலை குறித்து விமர்சனங்களையும் முன்வைத்தனர். சீனாவைப் பற்றிய குறிப்புகளை இந்த மாநாட்டின் போது 2 டஜன் இடங்களில் காண முடிந்தது. குறிப்பாக தென்சீனக்கடல் பகுதி மற்றும் தைவான் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகள் சந்தையை சிதைப்பதாகவும், இது ஜி7 நாடுகளின் தொழில்களை குறைத்து மதிப்பிடுவதோடு பொருளாதார பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில், தொழில்துறை திறனை மேம்படுத்தும் வகையில் முதலீடு செய்வது, பரவலான மற்றும் விரிவான விநியோக சங்கிலிகளை உருவாக்குவது மற்றும் சிக்கலான சார்ந்திருக்கும் நிலை மற்றும் பலவீனங்களை குறைப்பது என ஜி 7 தலைவர்கள் முடிவெடுத்தனர்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை சீனா ஆதரிப்பது குறித்தும் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். உக்ரைனுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்கவும் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் விளோடிமிர் செலன்ஸ்கி உடனான உரையாடலின்போது அமைதியான தீர்வை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி,” அமைதியான தீர்வுக்கான ஆதரவை வழங்க இந்தியா தன்னாலான அனைத்தையும் செய்யும்" என உறுதியளித்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற (16 th -17 th June) ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அடுத்து என்ன?: வளரும் நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வு குறித்து ஜி7 மாநாட்டில் கணிசமாக விவாதிக்கப்பட்டது. வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தேவைகள் குறித்து வளர்ந்த நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இதர ஆப்ரிக்க நாடுகள் உட்பட தெற்கு உலக நாடுகளின் தேவைகள் குறித்து இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஜி7 தலைவர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவை, வெளிப்படையான, நியாயமான, பாதுகாப்பான, அணுகக்கூடிய, பொறுப்புணர்வுடையவையாக இருப்பதை வலிமையான பொருளாதார நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தில் மோனோபோலி எனப்படும் தன்னிச்சையாக செயல்படும் நிலையை மாற்றி பெரும் மக்கள் திரளின் பயன்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜி7 நாடுகளின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்து வருகிறது, இது அதிகாரம் கை மாறுதல் நடப்பதை உணர்த்துகிறது. ஆனால் வல்லரசு நாடுகள் பனிப்போர் காலத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தங்களின் பிடி இருப்பதை உறுதி செய்ய எண்ணுகின்றன.
உலக அதிகார உறவுகளில் சமீபத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த தசாப்தங்களில் உலகப் பொருளாதாரமும் கவனிக்கத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் சீனாவைப் போலல்லாமல் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் மற்றும் திறந்த சமூகம் உள்ளது. எனவே இந்தியாவை முறையான உறுப்பினராக கருதாமல் வெளியே வைப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாகத் தோன்றவில்லை.
ஜி7 கூட்டமைப்பை ஜி10 ஆக மாற்றி, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளை இணைக்கலாம் என்ற பரிந்துரையும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் , அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் இன்னும் ஒருபடி மேலே போய் ஜி11 ஆக மாற்றி ரஷ்யாவையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி ஜி-7 கூட்டமைப்பின் உறுப்பினர்களை விரிவாக்கம் செய்வதற்கான தேவையை உருவாக்குகிறது.
இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி பேசும்போது “ஜி7 ஒன்றும் மூடப்பட்ட கோட்டை கிடையாது. மாறாக உலகத்திற்கான திறந்த மதிப்பீடுகளை நாங்கள் வழங்குகிறோம்” என்றார். எனவே ஜி7 நாடுகள் இந்தியாவை முழுநேர உறுப்பினராக்குவது குறித்து விவாதிக்க இதுவே சிறந்த தருணம்.
கட்டுரையாளர் - சஞ்சய் புலிபகா, தலைவர் - பொலிடியா ஆராய்ச்சி அமைப்பு
இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போர் - இந்தியா வெறும் பார்வையாளர் தானா?