புதுடெல்லி: தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே , கொழும்பு நகரில் கடந்த திங்கள் கிழமை அதிபர் செயலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார்.
திசநாயகே 57 லட்சம் ஓட்டுகள் அல்லது 42.3 சதவிகிதம் வாக்குகளை பெற்று, தன்னுடைய போட்டியாளர் சமாஜி ஜனா பாலாவேகாயா கட்சியின் சஜித் பிரமேதாசாவை விடவும் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 23 லட்சம் வாக்குகள் அல்லது 17.3 சதவிகித வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.
ஏகேடி என்ற சுருக்கப்பெயரோடு அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதியான 55 வயதான திசநாயகே , இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாட்டிற்கு முதன்முறையாக அதிபராக பதவி ஏற்றுள்ளார்.
இலங்கையின் வடக்கு மத்திய மாநிலத்தில் அனுராதபுரா மாவட்டத்தில் தம்புதேகம என்ற கிராமத்தில் திசநாயகே கடந்த 1968ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு தொழிலாளி ஆவார். அவரது தாய் குடும்பத்தலைவியாக இருந்தார். தம்புதேகம காமினி மகா வித்யாலயா மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் கல்வி பயின்றார். கல்லூரியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இலங்கையின் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியான ஜேவிபி என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவில் கடந்த 1987ஆம் ஆண்டு திசநாயகே சேர்ந்தார். மாணவப் பருவத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1987-1989ஆம் ஆண்டு காலகட்டங்களில் அரசுக்கு எதிரான ஜேவிபியின் கிளர்ச்சியில் அவர் தீவிரமாக முழுநேர அரசியல்வாதியாக ஈடுபட்டார். பேராதனியா பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தார். ஆனால், அச்சுறுத்தல் காரணமாக சிலமாதங்களில் அங்கிருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு ஆண்டு கழித்து களனியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சேர்ந்தார். 1995ஆம் ஆண்டு இயற்பியல் அறிவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.
பின்னர் 1995ஆம் ஆண்டு ஜேவிபி தலைமை குழுவில் இணைந்தார். 2000ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் அவர் அரசியல் அமைப்பு, தவறான பொருளாதார நிர்வாகம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் விமர்சகராக திகழ்ந்தார். தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் , இலங்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் சீர்திருத்தம் தேவை உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்துவதாக அவரது உரைகள் திகழ்ந்தன.
2004ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஜேவிபி கூட்டணி வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஒரு பகுதியாக 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதன்மூலம் பாராளுமன்றத்துக்கு 39 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குருநாகலா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு திசநாயகே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கே, திசநாயகேவை வேளாண், கால்நடை, நிலவளம் மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தார்.
இதையும் படிங்க: அதிபர் தேர்தலில் அனுரா குமார திசாநாயக வெற்றி; இலங்கையில் முதன்முறையாக அமைகிறது கம்யூனிஸ்ட் ஆட்சி!
வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து சுனாமி நிவாரணப்பணிகளை அதிபர் சந்திரிகா குமாரதுங்கே மேற்கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டணி அரசில் இருந்து ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி விலகியது. இதனால் ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க உத்தரவின்படி அமைச்சரவையில் இருந்த ஜேவிபி அமைச்சர்கள் பதவி விலகினர். எனவே அமைச்சரவையில் இருந்து திசநாயகே 2005ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பதவி விலகினார். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை எதிர்கட்சி தலைமை கொறடா ஆகவும் பணியாற்றினார்.
ஜேவிபியின் தலைவராக இருந்த அமரசிங்கே மாரடைப்பால் கடந்த 2014ஆம் ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து திசநாயகே ஜேவிபி தலைவராகப் பொறுப்பேற்றார். நல்லாட்சி, மனித உரிமைகள், ஊழல் எதிர்ப்பு மற்றும் ஏழ்மை ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் ஜனநாயக சோஷலிசத்தை நோக்கி ஜேவிபி பயணித்தது.
இலங்கையின் சோஷலிச சமூக பொருளாதார கூட்டணியான தேசிய மக்கள் சக்தி கூட்டணியை திசநாயகே 2019ஆம் ஆண்டு உருவாக்கினார். இதில் ஜேவிபி மற்றும் இதர இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் தவிர தனிநபர்களும் இடம் பெற்றனர். இலங்கையில் மேலும் சமத்துவம் நிலவ வேண்டும் என்ற கண்ணோட்டத்தை இந்த கூட்டணி பரஸ்பரம் பகிர்ந்து கொண்டது. இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுனா மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு நம்பிக்கையுள்ள மாற்றாக திகழ வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முதன்மை குறிக்கோளாக உள்ளது.
திசநாயகே பாராளுமன்றத்தில், ஊழல், மனித உரிமை மீறல்கள், தவறான பொருளாதார நிர்வாகம் போன்ற அரசுக்கு எதிரான தமது கனல் தெறிக்கும் பேச்சுகளால் பலரால் அறியப்பட்டுள்ளார். இலங்கை அரசின் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப அரசியல், ஆதாய அரசியலுக்கு எதிராக முக்கியமான விமர்சன குரலாக இருந்து வந்தார். இலங்கையின் சாதாரண மக்களின் கவலைகள் குறித்து நேரடியாக பேசும் திறன் பெற்றிருந்ததால் உழைக்கும் வர்க்கம் மற்றும் இளைஞர்கள் போன்ற வாக்காளர்கள் மத்தியில் புகழ்பெற்ற அரசியல்வாதியாக திகழ்ந்தார்.
இலங்கை அரசியலில் பலதசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக முக்கியமான விமர்சனங்களை அவர் முன் வைத்தார். ஆதிக்க மனப்பான்மையுள்ள அரசுக்கு முடிவு கட்டி ஜனநாயக முறைகளைக் கொண்ட அரசு மற்றும் நாட்டின் அரசியல் அமைப்பின் பொறுப்புடைமை ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வாதங்களை திசநாயகே முன் வைத்தார்.
2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டார். எனினும் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை மட்டும் பெற்றார். எனினும் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டது தேசிய மக்கள் சக்தி கூட்டணி வளர்ச்சி பெற்றுவரும் அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கு உதவியது.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தி கூட்டணி மேலும் வளர்வதற்கு உதவியாக இருந்தது. பாராளுமன்றத்தில் எண்ணிக்கை அதிகரித்தது. எண்ணிக்கையைப் பொறுத்தவரை முக்கியமான கட்சியாக உருவெடுக்காவிட்டாலும், முக்கிய அரசியல் கட்சிகளால் விரக்தியுற்றிருந்த இலங்கை மக்களிடம் குறிப்பிடத்தக்க வகையில் அதிர்வலைகளை தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஏற்படுத்தியது.
அதிபராக திசநாயகே தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்தியாவுக்கு என்ன நன்மை?
இந்தியா-இலங்கை இடையிலான உறவு பாரம்பரியமாக நட்புரீதியிலான நல்லுறவை கொண்டுள்ளது. கலாசாரம், மதம் மற்றும் மொழி ரீதியிலான தாக்கங்களுடன் தொடர்கிறது. இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகள் வளர்ச்சி பெறுகின்றன. வளர்ச்சி, கல்வி, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நிலவுகிறது.
இந்தியாவின் முக்கியமான வளர்ச்சி பங்குதாரராக இலங்கை திகழ்கிறது. பல ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவின் தூண்களாக இந்த பங்கெடுப்பு உள்ளது. 3.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த நிதி உதவியில் 570 மில்லியன் டாலர் மானிய உதவியையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையின் தேவைக்கு ஏற்ற உதவிகள் மற்றும் மக்களை மையப்படுத்திய இலங்கையுடனான இந்தியாவின் வளர்ச்சி பங்கெடுப்பு என்பது இருநாடுகளின் முதன்மை கூறாக உள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வீட்டு வசதி, தொழிலக முன்னேற்றம் ஆகியவற்றில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது இந்தியா 4 பில்லியன் டாலர் அளவுக்கு உதவி அளித்தது. சர்வதேச நிதியம் மற்றும் கடன் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையின் கடனை மறுகட்டமைக்க இந்தியா முக்கிய பங்கு வகித்தது.
இந்தியாவின் தென்பகுதியில் கடல் பகுதிக்கு நெருக்கமாக இருக்கும் இலங்கை இந்தியாவுக்கு புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். ஹம்பாந்தோட்டை துறைமுக வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றில் சீனாவின் முதலீடுகள் குறித்தும், இலங்கையுடன் உத்தி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனா ஆதிக்கம் செலுத்துவது குறித்தும் இந்தியா கவலைகளை வெளியிட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் இருந்து சீனாவை தள்ளி வைக்க வேண்டும் என இந்தியா முயற்சி செய்கிறது. தன்னுடைய செல்வாக்கின் கீழ் இலங்கை இருக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.
இலங்கை அரசியல் நிலப்பரப்பில் எதிர்பாரத வெற்றியாளராக திசநாயகே உயர்ந்திருக்கிறார். ஆனால், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பே இதனை இந்தியா ஊகித்திருந்தது.
அதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி பிரதிநிதிகள் திருவனந்தபுரம், அகமதாபாத், புது டெல்லி ஆகிய மூன்று நகரங்களுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த வருகையின்போது திசநாயகே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் பிற இந்திய தலைவர்களை சந்தித்தார்.
மீண்டும் கடந்த மாதம் தோவல் இலங்கைக்கு சென்றார். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றார். இதர அதிபர் வேட்பாளர்களுடன் சந்திப்பு நடத்தியதுடன் திசநாயகேவையும் சந்தித்தார். இதன்காரணமாக திசநாயகே தமது அரசின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுடன் எந்தமாதிரியான அணுகுமுறையை கடைபிடிக்கப்போகிறார் என்பது ஒருவித ஆர்முள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.