2025ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்க இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், உங்கள் வாழ்க்கை துணையுடன் தனியாக நேரம் செலவிடும் சரியான நேரம் இது. ஆண்டு முழுவதும் வேலை, பிரச்சனை, மகிழ்ச்சி, அழுகை என பலவற்றால் சூழ்ந்திருக்கும் உங்கள் வாழ்க்கை துணையை தமிழ்நாட்டில் உள்ள இந்த அமைதியான மற்றும் மனதிற்கு நிம்மதியை தரும் இடங்களுக்கு ஒரு முறை கூட்டிச்செல்லுங்கள். தமிழகத்தில் உள்ள ரொமான்டிக் இடங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டு, வாழ்க்கை துணையுடன் சென்று புது ஆண்டை புன்னகையுடன் தொடங்குங்கள்.
கொடைக்கானல் (kodaikanal): தாவரவியல் பூங்கா, மலையோர கேம்ப் ஃபயர், பள்ளத்தாக்கு, மூடுபனி என மலைகளின் இளவரசியான கொடைக்கானல் தமிழ்நாட்டில் உள்ள ரொமான்டிக்கான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்குள்ள பிரமிக்க வைக்கும் இடங்கள் நம்மை வியக்க வைத்து மனதிற்கு மகிழ்ச்சியை தரும். எக்கோ பாயின்ட், பைன் மரம் காடு, மெழுகு அருங்காட்சியம், வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற இடங்களை பார்வையிடுங்கள். உலக புகழ் பெற்ற குனா குகைக்கு சென்று அபிராமியே..தாலாட்டும் சாமியே என்ற பாடலை மறக்காமல் பாடிவிட்டு வாருங்கள்.
ஊட்டி (Ooty): நகர வாழ்க்கை சலசலப்பில் இருந்து தப்பிக்க சிறந்த இடம் மலைகளின் ராணியான ஊட்டி தான். நீலகிரியின் நீல மலைகளை மனதிற்கு பிடித்தவருடன் காண யார் தான் விரும்பமாட்டார்கள்?. சைக்கிள் ஓட்டுதல், படகு சவாரி, குதிரை சவாரி, கேம்பிங் என ஊட்டியில் மனதிற்கு பிடித்தவருடன் நேரம் செலவிட்டால் நேரம் போவதே தெரியாது. அதுமட்டுமல்லாமல், குன்னூரின் மூடுபனி மூடிய மலைகள் காதலை வெளிப்படுத்த நல்ல சூழலை உருவாக்கும்.
இதையும் படிங்க:கேரளாவிற்கு ட்ரிப் பிளான் பண்றீங்களா? இந்த 6 இடத்தை பார்க்க மிஸ் பண்ணீடாதீங்க!
தனுஷ்கோடி(Arichalmunai): தமிழ்நாட்டின் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கடலோர பகுதியான தனுஷ்கோடியில், வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட சிறந்த இடம். எக்கச்சக்க ரம்யமான சூழலை வைத்திருக்கும் தனுஷ்கோடி மனதை கட்டாயம் அமைதிப்படுத்தி தெளிவை உண்டாக்கும். இருபுறத்திலும் ஆர்ப்பரிக்கும் கடல் மனதிற்கு இதமாக இருப்பதை ஒரு முறை அனுபவித்து பாருங்கள்.
மேகமலை (Megamalai): பசுமையான சமவெளி, மலை சிகரங்கள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு நடுவே உங்கள் வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிடுவது பல பிரச்சனைகளுக்கு தீர்வை தரும். அதுமட்டுமல்லாமல், தேகத்தை மேகம் தொட்டு செல்லும் போது கிடைக்கும் உணர்வை இருவரும் ஒன்றாக அனுபவியுங்கள். வனவிலங்கு சரணாலயம், சுருளி அருவி, மேகமலை வியூபாயிண்ட், என மேகமலையில் சுற்றிப் பார்க்க பல இடங்கள் இருக்கின்றது.
ஏற்காடு (Yercaud): சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்திருக்கும் ஏற்காடு, தமிழகத்தில் உள்ள சிறந்த ரொமான்டிக் இடம் என்பதில் சந்தேகம் இல்லை. அழகிய மலைகள், காபி தோட்டங்களுக்கு நடுவில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ரிசார்ட், ஏரிகள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமையும். ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறை (Valparai): மனதிற்கு பிடித்தவருடன் இயற்கையின் இளமையை அனுபவிக்க விரும்புவோர்க்கு சிறந்த இடம் தான் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மத்தியில் அமைந்துள்ள வால்பாறை. இந்த அழகிய மலைவாசஸ்தலம் மற்றும் அங்கு வீசும் இதமான காற்றிற்காக, வால்பாறை 7வது சொர்கம் என அழைக்கப்படுகிறது.