விவரம் தெரிந்த நாள் முதல் கேமரா முன்பு நடிக்கத் தொடங்கிய கமலின் நடிப்பு 60 ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமாவிற்காக தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்துள்ள இந்த கலைஞன், இன்று தனது 70வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.
மக்களால் உலக நாயகன் என போற்றப்படும் கமல் ஹாசன், சினிமா துறையை தாண்டி ஃபேஷனிலும் டஃப் கொடுத்து வருகிறார் என்றால் மிகையில்லை. இவர், பிக்பாஸை தொகுத்து வழங்கிய நாட்களின் போது, நிகழ்ச்சிக்கு அணிந்து வரும் ஆடைகள் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

பொதுவாகவே, கதர் ஆடைகளை அணிய ஆர்வம் காட்டும் கமல்ஹாசன், தான் செல்லும் நிகழ்ச்சிகளில் அனைவரும் கதர் ஆடைகளை விரும்பி அணிய வேண்டும் என வலியுறுத்துவார். அதுமட்டுமா? கதர் துணியை இவ்வளவு டிசைனாக வடிவமைக்க முடியுமா என அனைவரின் வாயை அடைப்பது போல விதவிதமான ஆடைகளை அணிந்து வருவார்.

அமெரிக்காவின் சிகோகாவில் கதர் தொடர்பான தொழிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கினார். இவரது KamalHassan House of Khaddar (KHHK) பிராண்டில், கைத்தறி நெசவு மூலமாக அல்ட்ரா மாடர்ன் மற்றும் ஸ்டைலான ஆடைகளை வடிவமைக்க முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளார்.

நெசவுத் தொழில் அழிந்து விடக்கூடாது என்ற இவரது முனைப்பு, சர்வதேச அளவில் அங்கிகாரத்தையும் பெற்றுள்ளது. தமிழகம் , இந்தியாவை கடந்து, வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச ஃபேஷன் ஷோக்களிலும் தனது பிரண்டை அறிமுகம் செய்து வருகிறார்.

கதர் ஆடை என்றாலே வயதானவர்களும், அரசியல்வாதிகளும் அணிந்து கொள்வது என்ற தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார். இவரது, ஹவுஸ் ஆப் காதி பிராண்டிற்காக இவர் எடுக்கும் புகைப்படங்கள், எப்போது வெளியானலும் இணையத்தில் கவனம் பெறும்.

இவரது பிராண்டில், ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் ஆடைகள் விற்பனைக்கு உள்ளன. கிட்டதட்ட, 210 அமெரிக்க டாலரில் ஆடையின் விலை தொடங்குகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 210 டாலர் என்பது 16 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்