வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக, ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படுபவராக எதிர்பார்க்கப்படும் கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே தேர்தல் பிரசாரங்களில் அவ்வபோது வார்த்தைப் போர் மூட்டு வருகிறது.
இந்த நிலையில், சிகாகோ நகரில் டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'அரசியல் போட்டியாளர்களால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான வரலாற்றைக் கொண்ட ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிப்பதை கறுப்பின வாக்காளர்கள் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்' என்று நிருபர் ஒரு கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேரடியாக பதிலளிப்பதைவிடுத்து, கமலா ஹாரிசின் பாரம்பரியத்தை ட்ரம்ப் கேள்வி எழுப்பினார். "அவர் (கமலா ஹாரிஸ்) எப்போதும் இந்திய பாரம்பரியத்தை பின்னணியாகவும், அதனை மட்டும் வளர்ப்பவராகவும் தான் இருந்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர் கருப்பின நபர் என்று எனக்கு தெரியாது. தற்போது அவர் தான் கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். எனவே, கமலா ஹாரிஸ் இந்தியரா, கருப்பரா? என்று எனக்கு தெரியாது" என்று டொனால்ட் ட்ரம்ப் கேள்வியெழுப்பி உள்ளதாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "நான் எல்லோரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் அப்படி இல்லை. எல்லா விதத்திலும் இந்தியராக இருந்த அவர், திடீரென கருப்பின நபராக மாறிவிட்டார். யாராவது இதனையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ட்ரம்பின் இந்த கருத்துக்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கமலா ஹாரிசின் அடையாளம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். அதுகுறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. மாறாக, அதற்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் இதுபோன்ற தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல என்றும், பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் அமெரிக்காவில் பிறந்தவரல்ல என்ற விமர்சனத்தை முன்வைத்தார் எனவும் சிஎன்என் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான கமலா ஹாரிசின் தாய் இந்தியாவையும், அவரது தந்தை ஜமைக்காவையும் சேர்ந்தவர்கள். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இத்தம்பதிக்கு கலிஃபோர்னியா மாகாணத்தின் ஓக்லேண்டில் கமலா ஹாரிஸ் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஐயையோ.. அந்தம்மா ரொம்ப ஆபத்தானவங்க".. கமலா ஹாரிஸ் மீது ட்ரம்ப் புது விமர்சனம்!