வாஷிங்டன் : பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் 30 ஆயிரம் பாலஸ்தீனர்களும், ஆயிரத்து 200 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். காசாவில் போரை நிறுத்த சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து உள்ள போதிலும் அதற்கான தீர்வு என்பது கண்டபாடில்லை.
இந்நிலையில், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் பாலஸ்தீன்த்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்த்து அமெரிக்க விமான படை வீரர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், திடீரென அமெரிக்க விமானப் படை வீரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பயங்கர தீக் காயங்களுடன் தவித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்த போதும் ராணுவ வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த வீரரின் பெயர் ஆரோன் புஷ்னெல் என்றும் சான் ஆன்டானியோ, டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் விமானப் படையில் பணியாற்றி வரும் ஆரோன், பாலஸ்தீனத்தில் நடைபெறும் படுகொலைகளை கண்டித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் தூதரகம் முன் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை நிறுத்தக் கோரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ராணுவ வீரரின் மரணம் என்பது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. காஸா விவகாரத்தில் அமெரிக்கா மவுனம் காத்து வருவது அதிபருக்கு பைடனுக்கு பெரும் பின்விளைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் அதை பெரிதும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், மிச்சிகன் மாகாணத்தில் அதிபர் பைடன் தலைமையிலான ஜனநாயக கூட்டணி மிகவும் பின்னடைவில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக காஸா விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. மிச்சிகன் மாகாணத்தில் அரேபிய வாழ் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்பதால் அங்கு உள்ள வாக்குகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற காஸா விவகாரத்தில் அதிபர் பைடன் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும், மிச்சிகன் மாகாணத்தில் தேர்தல் தோறும் சில்லரை எண்ணிக்கைகளில் வேட்பாளர்கள் வாக்கு வித்தியாசத்தை இழப்பது என்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி கண்டார்.
அதேபோல் 2020 அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். எனவே மிச்சிகன் மாகாணம் என்பது அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக காணப்படுவதால் காஸா விவகாரத்தில் அமெரிக்கா கட்டாயம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிங்க : பேடிஎம் தலைவர் திடீர் பதவி விலகல்! இதுதான் காரணமா?