மாஸ்கோ: உக்ரைன் உடனான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இருநாட்டு உறவுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த நிலையில் வரும் 22, 23ஆம் தேதிகளில் ரஷ்யாவின் தலைமையில் அந் நாட்டின் கசான் நகரில் நடைபெற உள்ள 16ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின், "பிரதமர் மோடியுடன் ஒவ்வொரு முறை பேசும்போதும் உக்ரைன் உடனான போர் குறித்து அவரது கருத்துகளை கூறி வருகிறார்.அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த போர் அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் ரஷ்யா விரும்புகிறது. இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளை நாங்கள் நிறுத்தவில்லை. உக்ரைன் தரப்பில்தான் நிறுத்தினர். எங்கள் நாட்டுடனான உறவில் அமெரிக்கா சீர்குலைவை ஏற்படுத்தியது. எங்களுக்கு எதிராக தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால், இது அமெரிக்காவுக்கே பாதகமாக முடிந்தது.
இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம்: இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விருப்பம்!
அமெரிக்க டாலரை உபயோகிப்பது பலன் அளிக்கக்கூடியதா என்று ஒட்டு மொத்த உலகமும் யோசிக்கத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளே, தங்களது சொந்த டாலர் சேமிப்பை குறைத்துக் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை.
பிரிக்ஸ் உச்சி மாநாடு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. இது குறித்து இந்திய பிரதமர் மோடியே சுட்டிக்காட்டி இருக்கிறார். இது மேற்குலக நாடுகளுக்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில் மேற்கு நாடுகள் இல்லாத ஒரு அமைப்பு என்று கூறியிருக்கிறார். ரஷ்யா-சீனா இடையே தனித்தன்மை வாய்ந்த நட்புணர்வு உருவாகி உள்ளது. சர்வதேச அரங்கில் ரஷ்யா-சீனா இடையேயான தொடர்பு என்பது சர்வதேச உத்திப்பூர்வ வலுவுக்கு முக்கியமான காரணிகளைக் கொண்டதாகும்,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்