இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சீன நாட்டை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவில் நடைபெற்று வரும் தசு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சீன நாட்டவர்கள் மீது இந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சங்கலா மாவட்டத்தில் உள்ள பிஷம் பகுதி வழியாக இஸ்லாமாபாத்தில் இருந்து ஹோகிஸ்தான் நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்து உள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த வாகனம் பேருந்து மீது மோதி தற்கொலை படைத் தாக்குல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் சீனாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பலர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தற்கொலை படைத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் சீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பது வாடிக்கையாக மாறி வருகிறது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஹோகிஸ்தான் அடுத்த சங்கலா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 சீனர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்மைக் காலமாக இந்த தாக்குதல் சம்பவம் குறைந்து காணப்பட நிலையில், மீண்டும் துளிர் விடத் தொடங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தற்கொலை படைத் தாக்குதல் நடத்திய வாகனம் உருக்குலைந்த நிலையில் எங்கிருந்து அந்த வாகனம் வந்தது, யார் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடி விசாரணையை துவக்கி உள்ளதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் - சீனா இடையிலான பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்த ஏறத்தாழ 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன.
மேலும், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான சீனர்கள் பாகிஸ்தானில் தங்கி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு! டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை! - Delhi Excise Policy Scam