பெய்ஜிங்: தெற்கு சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஏராளமானோர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த கார் அங்கிருந்தவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் காரில் இருந்து தப்பிய நபரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். முதற்கட்ட தகவலின்படி, காரை ஓட்டி வந்தவருக்கு 62 வயது என தெரிய வந்துள்ளது. அவருக்கும் காயங்கள் இருந்ததால் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: போர் பதட்டம்: தைவானில் சீன போர் விமானங்கள், கப்பல்கள் நிலைநிறுத்தம்..!
மேலும், அந்த நபருடைய கழுத்து மற்றும் பிற பகுதிகளில் இருந்த காயங்களை தற்காப்புக்காக அவரே ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர். இருப்பினும் அந்த நபர் தொடர் சிகிச்சையில் இருப்பதால் இன்னும் முழு விசாரணை தொடங்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இக்கோர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், '' குற்றவாளியை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
சீன பிரதமர் லி கியாங், '' இந்த சம்பவத்தின் பின்னணியை உரிய முறையில் கையாண்டு வழக்கை விரைவாக விசாரித்து சட்டத்தின்படி குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும்'' என காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்