டமாஸ்கஸ் (சிரியா): மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இந்த போரில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிளர்ச்சியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போ, முக்கிய நகரான ஹமா ஆகிய நகரங்களை அவர்கள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இன்று தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் சிரியாவில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் வாழும் இந்திய மக்களை பாதுகாக்கும் பொருட்டு, டமாஸ்கஸில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், நெருக்கடியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ தூதரகம் தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிரியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு பயண ஆலோசனையை வெளியிட்டது. அதில், "சிரியாவில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
அதே நேரம், இந்திய குடிமக்கள் சிரியா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்ணை (+963 993385973) வெளியிட்டுள்ளது. இது தவிர, hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 11வது முறையாக ஆர்பிஐயின் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை...ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!
என்ன நடக்கிறது சிரியாவில்? சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியது. அலெப்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்து, நகரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன் மூலம் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியைத் துப்பாக்கியை வானை சுட்டுக் கொண்டாடினர். தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் பஷார் அல் ஆசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தெறிந்தனர். மேலும் ஹோமஸ் உள்ளிட்ட நகரங்களில் சிறையிலிருந்து கைதிகளைக் கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர்.
இதனிடையே டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.