டெல்லி: இந்தியக் கடற்படையில் பணியாற்றிய 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள், தனியார் நிறுவனத்தின் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குப் போர் பயிற்சி அளித்து வந்தனர். அப்போது, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாகக் கூறி, ஆகஸ்ட் மாதம் 8, 2022-ல் பேரையும் கத்தார் பாதுகாப்புப் படை கைது செய்தது.
இதனை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரிப் பல முறை மனு அளித்தும் அதனை நிராகரித்த கத்தார் அரசு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இது இந்திய மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு உறவினர்கள் தங்கள் உறவினர்களைத் தாய்நாடு திரும்ப வரவேண்டி வெளியுறவு அமைச்சகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
அதன் பின்னர், வெளியுறவு அமைச்சகம் அவர்களைத் தாயகம் திரும்பக் கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை அனைத்தையும் எடுக்கும் என உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், அந்நாட்டு சிறையில் இருந்த 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களுள், 7 பேர் ஏற்கனவே தாயம் திரும்பிவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தாஹ்ரா குளோபல் (Dahra Global) நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படையின் 8 முன்னாள் வீரர்களின் விடுதலையை வரவேற்கிறது. அதிலும், 7 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும், இந்த முடிவிற்குக் காரணமாக கத்தாரின் அமீருக்கு எங்களது நன்றி.
கடந்த 2022ஆம் ஆண்டு, நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தின் ரகசியங்களை உளவு பார்த்ததாகக் கூறி, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி உட்பட 8 வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, இந்த வெளியுறவுத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், அவர்கள் மீதான தண்டையை சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க சட்டக்குழு, குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், கத்தாருக்கான தூதுவர் மற்றும் மற்ற அதிகாரிகள் குடும்ப உறுப்பினர்களுடன் மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாகவும், இந்த விவகாரத்தின் தொடக்கம் முதல் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, துயாயில் நடைபெற்ற COP28 உச்சி மாநாட்டின் போது கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்தும், கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன் குறித்தும் விவாதித்தாகக் கூறப்படுகிறது. மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த விவகாரத்தின் கத்தார் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சட்டக்குழு, முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனையை, சிறைத் தண்டனையாக மாற்றியது பற்றிய ரகசிய நீதிமன்ற உத்தரவை, கொண்ட செய்தி அறிக்கையை 2023, டிச.28ஆம் தேதி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்திருந்தார். அதன்படி அவர் கூறியதாவது, "முதலில் மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டதை குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டோம்.
தற்போது, எங்கள் சட்ட ஆலோசனை அணியிடம் நீதிமன்றத்தில் உத்தரவும் உள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தண்டனை அனுபவித்து வந்ததும், அவர்கள் மீதான மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் என்னால் உறுதி செய்ய முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நாட்டை கொள்ளையடிப்பது, பிளவுபடுத்துவதே காங்கிரசின் குறிக்கோள்" - பிரதமர் மோடி!