சென்னை: கரோனா தொற்று மனிதர்களின் உடலில் மட்டுமல்லாது, மனதளவிலும் மிக மோசமாக பாதிப்புகளை ஏற்படுத்தியதன் மூலமாக, சில நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியது. உலகளாவிய மனநல அறிக்கை ஒன்றில், கரோனா தொற்றுக்குப் பிறகு மனிதர்களின் மனநலம் மற்றும் வாழ்க்கை மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாகவும், இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை நாம் இன்னும் அடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், 35 வயதிற்குட்பட்ட இளையவர்களே கரோனா தொற்றுநோயால் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் என்று உலகளாவிய மனநலத் திட்டத்தின் ஆண்டு வெளியீடான, உலகின் மனநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, உலகளாவிய மக்கள்தொகையின் மனநலத்தைப் பற்றிய பார்வையை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கையானது ஆண்டு முழுவதும் உள்ள மக்களின் மனநிலை, முந்தைய ஆண்டுகளுடன் தொடர்புடைய போக்குகள் மற்றும் இந்த போக்குகளின் முக்கிய இயக்கிகள் பற்றிய நுண்ணறிவு ஆகியவற்றை வழங்குகிறது.
இதுமட்டுமல்லாது, ஆண்டு முழுவதும் வெளியிடப்படும் இந்த விரைவு அறிக்கைகள், ஒவ்வொரு ஆண்டின் தரவுகளின் அடிப்படையில், மனிதர்களின் மனநலத்தின் பல்வேறு அம்சங்கள், நுண்ணறிவுகள் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 2023-ஆம் ஆண்டின் அறிக்கை, 71 நாடுகளில் இருந்து 13 மொழிகளில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 175 பதில்களை அடிப்படையாகக் கொண்டது.
மேலும், இந்த மதிப்பீட்டு ஆய்வு, ஒரு தனிநபரின் மனநல அளவை (MHQ-Mental Health Quotient) கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனநிலை மற்றும் கண்ணோட்டம், சமூகத்தில் தன்னியக்கம், உந்துதல், மனம் மற்றும் உடல் இணைப்பு, அறிவாற்றல், தகவமைப்பு மற்றும் பின்னடைவு என்று ஆறு விதமாக, மன ஆரோக்கியத்தின் 47 அம்சங்களை மதிப்பிடுகிறது.
மக்களின் வாழ்க்கை முறை, குடும்பம் மற்றும் நண்பர்களுடனான இயக்கவியல், தனிப்பட்ட மன உளைச்சல்கள் பற்றிய தகவல்களையும் இந்த ஆய்வின் மூலம் கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை நோக்கி நகர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், உலகளாவிய மக்களின் மனநலம், கரோனா தொற்றுநோய்க்குப் பின்பு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தொற்றுநோய்களின்போது ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சிக்குப் பிறகு, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, MHQ மதிப்பெண்கள் 2023-ஆம் ஆண்டில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உள்ளது.
மேலும், இந்த தொற்றுநோயின் நீடித்த தாக்கம், வாழ்க்கை, வேலை செய்யும் விதம், நமது பழக்கவழக்கங்கள், தொலைதூர வேலை, உணவு முறை என அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மனிதர்கள் மகிழ்ச்சியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்த்து, இந்த அறிக்கையில், டொமினிக்கன் குடியரசு, இலங்கை, தான்சானியா, பனாமா, மலேசியா, நைஜீரியா, வெனிசுலா, எல் சல்வடோர், கோஸ்ட்டா ரிக்கா மற்றும் உருகுவே ஆகிய பத்து நாடுகளும் உலகின் மகிழ்ச்சியான முதல் பத்து நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், உலகின் மகிழ்ச்சியற்ற பத்து நாடுகளாக உஸ்பெகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், தஜிகிஸ்தான், ஆஸ்திரேலியா, எகிப்து, அயர்லாந்து, ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவைப் பொறுத்தவரையில், உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் 61-வது இடத்தையும் மற்றும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 126-வது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2024; விருதுகளைக் குவித்த ஓபன்ஹெய்மர் திரைப்படம்..!