வார்ஸா (போலந்து): ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதன்கிழமை (ஆகஸ்ட் 21), போலந்து தலைநகர் வார்ஸா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் இருதரப்பு உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தலைநகர் வார்ஸாவில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் புதிய தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் இநதியா, போலந்து இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டம் குறித்து போலந்து பிரதமர் கூறும்போது "இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய எங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய நாங்கள் ஆவலாக உள்ளோம்" என்று டொனால்ட் டஸ்க் கூறினார்.
முன்னதாக, தலைநகர் வார்ஸாவில் இந்திய சமூகத்தினர் முன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், " புத்தாக்கமும், இளைஞர்களும் இந்தியா மற்றும் போலந்தின் வளர்ச்சிக்கு புத்தொளி பாய்ச்ச உள்ளனர். சமூக பாதுகாப்பு குறித்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்பது போன்ற உங்களுக்கு நன்மைப் பயக்கும் பல நல்ல செய்திகளுடன் இன்று நான் இங்கு வந்துள்ளேன்" என்று மோடி பேசினார்.
#WATCH | Warsaw: Poland PM Donald Tusk says, " as far as exchanges between india and poland are concerned, we discussed various topics. we want to strengthen our cooperation in the area of defence and trade. there is immense mutual possibilities. poland is ready to take part in… pic.twitter.com/wCkJKtmhnh
— ANI (@ANI) August 22, 2024
"கபடி சாம்பியன்ஷிப் போட்டியை போலந்து முதன்முறையாக இந்த ஆண்டு நடத்த உள்ளது. இந்த வகையில், இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக கபடி உருவெடுத்துள்ளது" என்றும் பிரதமர் மோடி கூறினார்.
"45 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் (நரேந்திர மோடி) போலந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் புதிய தொடக்கத்தை அளிக்கும்" என்று, மோடியின் போலந்து பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தமது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்திருந்தது.
இந்தியா - போலந்து இடையேயான ராஜாங்கரீதியான நல்லுறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் நிலையில், பிரதமர் மோடி போலந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலந்து பயணத்தைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, மோடி அந்நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார்.
இதையும் படிங்க:7 மணி நேர உக்ரைன் உரையாடலுக்கு 20 மணி நேர ரயில் பயணம்.. மோடி செல்லும் Train Force One-ல் என்ன இருக்கிறது?