டமாஸ்கஸ்: கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் நகரை பிடித்த நிலையில் தனி விமானம் ஒன்றில் தப்பி சென்ற அதிபர் பஷார் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக ரஷ்யா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பஷார் ஆசாத்தின் 50 ஆண்டு கால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து எதிர்கட்சியினரும், கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் டமாஸ்கஸ் உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும்,புரட்சியாளர்களின் கொடிகளை அசைத்தும் பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கிளர்ச்சியாளர்கள் தலைநகரை பிடித்தது, ஆசாத் தப்பி சென்றது என குறுகிய காலகட்டத்தில் சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் சிரியாவின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. சிரியா நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மத்திய கிழக்கில் அதிகார நடுநிலை தன்மையை நோக்கி அமெரிக்காவின் அணுகுமுறை இருக்கும். ஆசாத்தின் வீழ்ச்சி என்பது நீதிக்கான அடிப்படையான செயல்பாடு. அதே நேரத்தில் அபாயம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை கொண்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் சரியான விஷயங்கள் இப்போது நடப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த செயல்பாடுகளை அமெரிக்கா மதிப்பீடு செய்யும்," என்றார்.
ரஷ்யாவின் கோரிக்கை: இதனிடையே ரஷ்யாவுக்கான ஐநா துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி இது குறித்து கூறுகையில், சிரியா விவகாரம் குறிதது விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிரியாவின் அதிபர் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோவுக்கு வந்ததை டாஸ் மற்றும் ஆர்ஐஏ அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இந்த நிலையில் சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம், ரஷ்ய ராணுவ கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் கூறியிருப்பதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ கூறியுள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய நிலையில் அதிகாரத்தை மாற்றம் செய்வது அமைதியான முறையில் நடைபெறுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்த பின்னரே ஆசாத் சிரியாவில் இருந்து வெளியேறி உள்ளதாக முன்னர் ரஷ்யா கூறியிருந்தது.
சிரியாவின் கிளர்ச்சி அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான அபு முகமது அல்-கோலானி, "நாட்டின் எதிர்காலம் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இவர் முன்பு அல்கைய்தா அமைப்பின் கமாண்டராக இருந்தவராவார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அல்கைய்தா உடனான தொடர்புகளை விட்டு விலகினார். மதசகிப்பு தன்மை, பன்முக தன்மைக்கு ஆதரவு தருவதாக கூறியிருந்தார். அவரது ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு அமெரிக்கா, ஐநாவால் தீவிரவாத இயக்கம் என்று கருதப்படுகிறது.
கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் நகருக்கு நுழைந்த நிலையில் சனிக்கிழமையன்று பொது வெளியில் தோன்றிய அவர், உமையா மசூதிக்கு சென்றார். "ஆசாத்தின் தோல்வி என்பது இஸ்லாமிய தேசத்தின் வெற்றி," என்று கூறினார். ஆசாத் ஆட்சியில் ஈரானின் பேராசைக்கான பண்ணையாக சிரியா உருவாக்கப்பட்டது,"என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: டூட்டி நேரத்தில் 'புஷ்பா' படம் பார்த்த போலீஸ் அதிகாரி; நெல்லை கமிஷனரிடம் வசமாக சிக்கினார்!
இந்த நிலையில் சிரியா அரசு தொலைகாட்சி வெளியிட்ட செய்தியில், "ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். சுதந்திரமான சிரியாவை மக்கள் பாதுகாக்க வேண்டும். டமாஸ்கஸ் பகுதியில் மாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் தொலைகாட்சியில் தோன்றிய கிளர்ச்சியாளர்களின் கமாண்டர் அனஸ் சல்காதி, "ட்ரூஸ், சன்னிகள், அலவைட்டுகள் மற்றும் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவானதாக சிரியா இருக்கும். சிரியா ஒவ்வொருவருக்குமானது. ஆசாத் குடும்பம் செய்தது போன்று மக்களை நடத்தமாட்டோம்,"என்றும் அவர் கூறியுள்ளார்.
தலைநகரில் கொண்டாட்டங்கள்: கிளர்ச்சியாளர்கள் சிரியாவை கைப்பற்றியதைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரில் பொதுமக்கள் மசூதிகளில் வழிபாட்டில் ஈடுபட்டனர். கடவுள் மகாத்தானவர் என்று கூறினர். ஆசாத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இளம் சிறார்கள் பாதுகாப்பு படைகள் போட்டு சென்ற துப்பாக்கிகளை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிளர்ச்சியாளர்கள் பெரும்பாலும் சன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். ட்ரூஸ் சமூகத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். வடகிழக்குப் பகுதிகளில் கிறிஸ்தவர்கள், குர்திஷ் சமூகத்தினர் உள்ளனர்.
சிரியாவின் அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான் நாடுகளும் ஹிஸ்புல்லா இயக்கமும் ஆதரவு அளித்து வந்தன. ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்தது ஈரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேல் உடனான பிரச்னை காரணமாக ஈரான் சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஈரான், "சிரிய மக்கள் வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல், வற்புறுத்தல், அழிவு அற்ற நிலையில் செயல்பட வேண்டும்,"என்று கூறியுள்ளது.இதனிடையே டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரகம் கிளர்ச்சியாளர்களால் சூறையாடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "சிரியா இப்போது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டது. முற்றிலுமாக நிலை குலைந்து விட்டது. மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது,"என்று கூறிள்ளார். சிரிய பிரதமர் மொகமது காஜி ஜலாலி கூறுகையில், "எதிர்கட்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்ட அரசு தயாராக இருக்கிறது. செயல்பாடுகளை இடைக்கால அரசுக்கு மாற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்,"என்று கூறியுள்ளார்.