டாக்கா: வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக அங்கு வன்முறை நடைபெற்று வரும் நிலையில், கலவரத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அந்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள், உறவினர்களுக்கு அரசு வேலைகளில் 30 இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அதை ரத்து செய்ய வலியுறுத்திய மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. வங்கதேசத்தில் இந்த போராட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மாணவர் அமைப்பினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தலைநகர் டாக்காவில் இந்த மாணவர் போராட்டம் சுமார் 2 வாரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ஆளும் தரப்புடன் தொடர்புடைய குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்கிய நிலையில், அது வன்முறையாக மாறியதாக சொல்லப்படுகிறது.
தொடர் போராட்டங்கள் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்படி ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 5ம் தேதி அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவே மாணவர்களின் போராட்டத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மாணவர்களின் போராட்டத்தில் அங்குள்ள் டிவி நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. பொதுச் சொத்துகள் கடும் சேதமடைந்து உள்ளன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 24 மணி நேர அவசரகால எண்களையும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச் சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.