ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): மனிதன் உள்ளிட்ட பல செல் உயிரினங்களின் மரபணுக்கள் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு மைக்ரோ ஆர்என்ஏ எனும் நுண்ணிய மூலக்கூறுகள் முக்கியமான அடிப்படை காரணி என்பதை விக்டர் அம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளனர்.
ஒரு மில்லிமீட்டர் நீளமே உள்ள கேனோர்ஹப்டிடிஸ் எலிகன்ஸ் (சி. எலிகன்ஸ்) எனும் வட்டப்புழவில் இவர்கள் தங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
சி. எலிகன்ஸ் புழுக்களின் அளவு சிறியதாக இருந்தபோதிலும், இவை பெரிய அளவிலான உயிரினங்களில் உள்ள நரம்பு மற்றும் தசை செல்கள் போன்ற பல பிரத்யேக உயிரணுக்களைக் கொண்டுள்ளன என்பதை விக்டர் அம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோர் தங்களது ஆராய்ச்சியில் கண்டறிந்தனர்.
பலசெல் உயிரினங்களில் திசுக்கள் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்கான ஒரு பயனுள்ள மாதிரியாக, இவ்விரு விஞ்ஞானிகள் ஆய்வு அமைந்துள்ளது. அவர்களது இந்த ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் விதத்தில் விக்டர் அம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் 2024 ஆண் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானி அம்ரோஸ், 1953 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்துக்குட்பட்ட ஹனோவரில் பிறந்தார். 1979 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டம் (PhD) பெற்றார். தொடர்ந்து அங்கேயே அவர் 1979-1985 காலகட்டத்தில் முதுகலை ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொண்டார்.
தொடர்ந்து 1985 இல், கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆய்வாளராக உயர்ந்தார். 1992-2007 வரை டார்ட்மவுத் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றிய அம்ரோஸ், தற்போது மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் இயற்கை அறிவியல் பேராசிரியராக உள்ளார்.
விஞ்ஞானி ருவ்குன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்துக்குட்பட்ட பெர்க்லியில், 1952 இல் பிறந்தார். 1982 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், கேம்பிரிட்ஜில் உள்ள எம்ஐடியில், 1982-1985 இல் முதுகலை ஆராய்ச்சியாளராக இருந்தார். 1985 இல் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் முதன்மை ஆய்வாளராக பணியாற்றிய ருவ்குன், தற்போது அங்கு மரபியல் பேராசிரியராக உள்ளார்.
1901 ஆம் ஆண்டு முதல் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட வருகிறது. இதுவரை 13 பெண் மருத்துவ விஞ்ஞானிகள் உட்பட் மொத்தம் 227 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.