நைஜீரியா: நைஜீரியாவில் உள்ள நைஜர் மாகாணத்தில் தரை வழிச் சாலைகளை விட நீர் வழிப் போக்குவரத்தே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், நைஜீரியாவில் ஆறுகள் அதிகமாக இருப்பதால், அங்கு படகு போக்குவரத்து என்பது சாதாரணமாக உள்ளது. அதனால் அந்நாட்டு அரசு, படகில் குறைந்த அளவிலான பயணிகளை ஏற்ற வேண்டும் எனவும், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உடையை வழங்க வேண்டும் எனவும் பல கட்டுப்பாடுகளை படகு உரிமையாளர்களுக்கு விதித்துள்ளது.
இருப்பினும், சில நேரங்களில் விதிகள் மீறப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் விபத்துக்களும் அடிக்கடி நிகழ்கிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (அக்.1) இரவு நைஜர் ஆற்றில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமையன்று மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, படகில் 300 பேர் வீடு திரும்பியுள்ளனர். அந்த படகு நைஜர் ஆற்றில் வந்து கொண்டிருந்த போது, மொக்வா என்ற இடத்தில் பாரம் தாங்காமல் கழிந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விபத்தில் ஆற்றில் விழுந்தவர்களில் 120க்கும் மேற்பட்ட நபர்கள் காப்பாற்றப்பட்டாலும், பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி நீமா மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன?
அதனால் 100 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதிக அளவில் பயணிகளை படகில் ஏற்றுவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோல், 2023 ஜூன் மாதம் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு, ஒரே படகில் 250 பேர் திரும்பிக் கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் ஏற்பட்ட விபத்தில் 144 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் உட்பட 108 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது நடந்த படகு விபத்து கடந்த 18 மாதங்களில் நடந்த 2வது மிகப்பெரிய விபத்து ஆகும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்