கான்பெர்ரா (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்தில் உள்ல மவுண்ட் ஈசா (Mount Isa) பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கான்பெர்ராவில் உள்ள இந்திய உயர்மட்ட ஆணையம் அதன் X பக்கத்தில், “குயின்ஸ்லாந்தின் மவுண்ட் ஈசா அருகே வெள்ளப்பெருக்கில் இந்தியர் ஒருவர் இறந்த செய்தி சோகத்தை ஏற்படுத்துகிறது.
இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் எங்களது குழு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தொடர்பில் இருக்கும்” என பதிவிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் இந்த இந்தியர் குறித்த விவரங்களும், அவர் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
-
Heart breaking tragedy in Australia: an Indian national lost her life in a flooding incident near Mount Isa, Queensland. Deepest condolence to the family of the deceased. Mission team is in touch for all necessary assistance.@MEAIndia @DrSJaishankar
— India in Australia (@HCICanberra) February 16, 2024
முன்னதாக, சன்ஷைன் கோஸ்ட் மக்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், மவுண்ட் ஈசா அருகே வெள்ளத்தில் மூழ்கிய கார் ஒன்றில், பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும், இது குறித்து மேலும் விசாரித்து வருவதாகவும் குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சமீபத்தில் நிலவும் வானிலை நிலவரத்தால், மவுண்ட் ஈசா பகுதியின் சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் தேங்கி நிற்கும் இடங்களில் செல்ல வேண்டாம் எனவும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!