ஜெனிவா: ஐநா மனித உரிமைகள் சபையின் 55-வது அமர்வு, நேற்று (பிப்.26) நடைபெற்றது. இந்த அமர்வில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இஸ்ரேல் - காசா போர் குறித்து உரையாற்றிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
மக்களை பணயக் கைதிகளாக பிடித்துச் செல்வதையும், பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மோதல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர நிவாரணம் வழங்க வேண்டும். இஸ்ரேல் - காசா இடையிலான மோதல், இப்பிராந்தியத்தை தாண்டி பரவாமல் இருப்பது முக்கியம்.
பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்திலும், யூத மக்கள் இஸ்ரேலிலும் வாழும் இரு நாடுகளின் தீர்வை (two-state solution) கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்” என்றார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டின் பேச்சுவார்த்தை அமர்வில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். மேலும், அவர் இரு நாடுகளின் தீர்வு மிகவும் அவசியம்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலில் ஆயிரத்து 200 மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஹமாஸ் அமைப்பினர் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காசாவிற்குள் இராணுவ தாக்குதல் நடத்தி, காசாவை உருக்குலைய வைத்துள்ளது.
இந்த தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்று காசாவின் சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளது. இதனிடையே போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பாலஸ்தீன பிரச்சினைக்கு இந்த இரு நாடுகள் நேரடி சமாதான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான சூழலை உருவாக்கி, பிரச்சினையைத் தீர்க்க இந்தியா அழைப்பு விடுத்து வருகிறது.
இதையும் படிங்க: பாலஸ்தீனத்திற்கு விடுதலை: இஸ்ரேல் தூதரகம் முன் அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலை!