குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 'பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி' என்ற கிளர்ச்சி குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், துகி மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது.
நேற்று இங்கு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு, துப்பாக்கி ஏந்திய நபர் உள்ளே புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 20 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், பெரும்பாலான ஆண்கள் பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மூன்று பேர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் காயமடைந்த ஏழு பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. ஜப்பானின் நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு செய்தது என்ன?
கடந்த திங்கள் கிழமை அன்று இதேபோல பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி குழுவினர், பாகிஸ்தான் விமான நிலையத்திற்கு வெளியே சீன நாட்டவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். ஆனால், நிலக்கரி சுரங்க தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில் பாதுகாப்பு படையினர் அவரை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த அமைப்பில், இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்கள் குழுவுக்கு பாகிஸ்தான் தலைமை வகிக்கிறது. மேலும், பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான சீனர்கள் பணிபுரிகின்றனர். இந்த சூழலில், அங்கு நடந்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்