மணிலா: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் பல்வேறு தீவுகளைக் கொண்ட தொகுப்பு நாடாகும். அங்கு தீவுகளுக்கு இடையே நடைபெறும் போக்குவரத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அங்குள்ள மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய பிலிப்பைன்ஸ் அருகே மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை (பிசிஜி) தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் செபு மாகாணத்தில் உள்ள நாகா நகரின் கடற்கரையிலிருந்து, 1.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நேற்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 8.25 மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த படகில் 11 பேர் பயணித்தாக கூறப்பட்ட நிலையில், 12 பேர் படகில் இருந்ததாகக் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 6 நபர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் ஒரு நபர் மட்டும் செபுவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்" - மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!