சுவிட்சர்லாந்து: டிஜிட்டல் கரன்சி அல்லது மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சியின் மூலம் எல்லை கடந்த பணப் பரிமாற்றத்தில் அதிக மற்றும் வேகமான செயல் திறன் கொண்டு இருக்க முடியும் என்றும் கூடுதலாக வீண் செலவினங்களைக் கட்டுப்படுத்தக் கூடும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில், நாட்டில் டிஜிட்டல் கரன்சி மொத்த மற்றும் சில்லறை வகையில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி மூலம் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை எளிதில் மேற்கொள்ள முடியும் என்றும், சர்வதேச பணிப் பரிவர்த்தனைகள் அதிக செயல் திறனுடனும், வேகமாகவும், மிக மிகக் குறைந்த செலவினங்களைக் கொண்டும் மேற்கொள்ள முடியும் என்றும் சக்திகாந்த் தாஸ் கூறினார்.
டிஜிட்டல் கரன்சியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவது என்பது அதன் வெற்றியைப் பொறுத்தது என்றும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கற்றுக் கொண்டதன் மூலம் அது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சில்லறை வணிகத்தில் 40 லட்சம் பயனர்கள் மற்றும் 40 ஆயிரம் வணிகர்கள் இந்த டிஜிட்டல் கரன்சியில் பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார். E-ரூபாய்க்குப் பயன்படுத்தப்படும் QR குறியீடு UPI இல் பயன்படுத்தப்படும் அதே QR குறியீடு போன்றதாகவும் அதேபோல் மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி மற்றும் UPI கட்டண முறைகள் இயங்கக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்" - ராகுல் காந்தி வழக்கில் வழக்கறிஞருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!