பெங்களூரு: பிரிட்டன் அரசர் சார்லஸ் மற்றும் அரசி கமிலா தனிப்பட்ட முறையில் கடந்த அக்.26 ஆம் தேதி பெங்களூருவின் ஒயிட் ஃபீல்டில் உள்ள சவுக்கியா ஆரோக்கிய மையத்துக்கு வருகை புரிந்தனர். அங்கு ஐசக் மத்தாய் நூரனால் என்ற சுகாதார ஆலோசகரின் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், சிகிச்சை யோகா மற்றும் குத்தூசி மருத்துவம் போன்ற இந்திய பாரம்பரிய நடைமுறைகளை எடுத்து கொண்டனர்.
இந்த ஐசக் மத்தாய் நூரன் என்ற சுகாதார ஆலோசகர் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் நீண்ட கால நெருங்கிய நண்பராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட இந்தியர்களுள் ஒருவரும் ஆவார்.
2019ஆம் ஆண்டும் வருகை தந்திருந்த பிரிட்டன் அரசர்: பிரிட்டன் அரசர் சார்லஸ் இந்த ஆரோக்கிய மையத்துக்கு வருவது இது ஒன்றும் முதல் முறையல்ல. கடந்த 2019ஆம் ஆண்டு பிரிட்டன் அரசர் சார்லஸ் தனது 71வது பிறந்தநாளை இங்குதான் கொண்டாடினார்.
புத்துணர்ச்சியூட்டும் யோகா சிகிச்சை: இந்நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் சிகிச்சைகாக பெங்களூரு வந்து இன்று மீண்டும் பிரிட்டன் திரும்பியுள்ளனர். இவர்களது பயணம் குறித்து சுகாதார மையத்தின் அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியாதாவது, "பிரிட்டன் அரசர் மற்றும் அரசி இங்கு யோகா மற்றும் தானம் மேற்கொள்ள வந்தனர். இங்கு அவர்கள் சுத்த சைவ உணவுடன் முட்டையை உணவாக எடுத்து கொண்டனர். மேலும் இங்கு அவர்கள் ராஜா ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் உட்பட ஆரோக்கிய சிகிச்சையைப் பெற்றனர்.
பிரிட்டன் அரசருக்கு இந்திய முறை சிகிச்சை: இங்கு அவர்களுக்கு காலை பொழுதில் யோகாவுடன் சிகிச்சை தொடங்கும். இதையடுத்து உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை சுய பரிசோதனை செய்யும் முறை கற்பிக்கப்பட்டது. பின் மருத்துவருடன் உரையாடல் நடைபெறும். இந்த உரையாடல்கள் மற்றும் உடல் பரிசோனைகள் காலை, மதியம் உணவுக்கு பின் தொடர்ந்து நடைபெறும்.
பிரிட்டன் அரசர் மற்றும் அரசி நமது தோட்டத்தில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் என இயற்க்கை (ஆர்கானிக்) உணவுகளை எடுத்து கொண்டனர். பின் மாலை வேலையில் தானம் தொடங்கும். இந்த வரிசையில்தான் மூன்று நாட்களும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: விக்கிபீடியா இடதுசாரிகள் வசம்; நன்கொடை அளிக்க வேண்டாம்: எலான் மஸ்க்
நாடு திரும்பிய பிரிடன் அரசர், அரசி: மேலும் பேசிய அவர், "இந்த மூன்று நாள் சிகிச்சை பயணமாக வந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசி இங்கு அமைந்துள்ள இயற்கை விவசாயம் மற்றும் மருத்துவத் தோட்டத்தை சுற்றிப் பார்த்தனர், மேலும் இங்குள்ள மாட்டு கொட்டகையை பார்வையிட்டனர், எப்போதும் இருவரும் புல்வெளியில் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த இடத்தில்தான் நேரத்தை செலவிட்டனர். இந்தியாவில் இருக்கும் ஈக்கள், தவளைகள் மற்றும் காட்டு முயல்கள் பற்றி இருவரும் கேட்டறிந்தனர். இந்நிலையில் இருவரும் இன்று மீண்டும் பிரிட்டன் திரும்பினர்.
இந்தியாவும் பிரிட்டன் அரசரும்: அதுமட்டுமின்றி பிரிட்டன் அரசர் மையத்தில் ஜகரண்டா மரக்கன்று ஒன்றை நட்டார். கடந்த 30-40 ஆண்டுகளாக சார்லஸ் மன்னர் இந்த ஆயுர்வேத மற்றும் தானம் சிகிச்சைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் ஹோலிஸ்டிக் மெடிசின் மற்றும் ஹெல்த்கேர்க்கான பிரிட்டிஷ் சங்கத்தின் முக்கிய தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு இருக்கும் இயற்கை தோட்டக்கலை மற்றும் மருத்துவ செடிகள் தோட்டம், நீர் சேகரிப்பு அமைப்பு, சோலார் பேனல்கள், பயோ கேஸ் ஆலை என அனைத்தும் பிரிட்டன் அரசரை கவர்ந்தது” என்றார்.
பிரதமரும் பிரிட்டன் அரசரும்: பிரிட்டன் அரசர் சார்லஸ் பல ஆண்டுகளாக ஆயுர்வேத முறை சிகிச்சைக்கான பல்வேறு நடவடிக்கைகளை பிரிட்டனில் எடுத்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் மோடி லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சென்றபோது அரசர் சார்லஸூம் பிரமருடன் இணைந்து பிரிட்டனில் புதிய ஆயுர்வேத சிறப்பு மையம் ஒன்றை துவங்கி வைத்தார். இந்த மையத்தில்தான் முதல்-உலகளாவிய யோகா மற்றும் ஆயுர்வேதம் பற்றிய ஆதார ஆராய்ச்சி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-10-2024/22797125_etvwc.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்