இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மக்கள் கட்சி இணை தலைவர் அசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இரண்டாவது முறையாக அசிப் அலி சர்தாரி அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 68 வயதான அசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சிகளின் கூட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவரைத் எதிர்த்து வலது சாரி அரசியலை ஊக்குவிக்கும், பல மதம் சார்ந்த கட்சிகளின் கூட்டணியான சன்னி இத்தேஹாத் கவுன்சிலின் மஹ்மூத் கான் அச்சக்சாய் போட்டியிட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தேசிய சட்டப்பேரவை, 4 மாகாணா சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் அசிப் அலி சர்தாரி 255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மஹ்மூத் கான் அச்சக்சாய் 119 வாக்குகள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் புதிய அதிபராக அசிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசி பூட்டோவின் கணவரான அசிப் அலி சர்தாரி தொழிலதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை நிறுவனரும் ஆவார். இதற்கு முன் 2008 முதல் 2013 ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக அசிப் அலி சர்தாரி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ராணுவம் உள்ளிட்ட எதிலும் பதவி வகிக்காமல் பொது மக்களில் இருந்து இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் அசிப் அலி சர்தாரி என்பது குறிப்பிடத்தகக்து. தற்போதைய அதிபர் ஆரிப் அலிவியின் பதவிக் காலம் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், காபந்து அரசு காரணமாக அவர் தொடர்ந்து நீடித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய அரசு அமைந்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றிய நிலையில் புதிய அதிபராக அசிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! என்ஐஏ வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சி!