தெஹ்ரான்: ஈராக்கின் கர்பலாவில், முகமது நபியின் பேரன் ஹுசைன் இபின் அலியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், சியா பிரிவு இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஈராக்கிற்கு வருவார்கள்.
அந்த வகையில், இந்த முறை நடக்கும் தியாகத் திருநாளில் பங்கேற்க, பாகிஸ்தானில் இருந்து 51 யாத்ரீகர்கள் ஈராக்கிற்கு பயணித்தனர். இந்த நிலையில், நேற்றிரவு மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் அருகே இவர்கள் வந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 28 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாஃப்ட் நகருக்கு வெளியே விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்தபோது பேருந்தில் 51 பேர் இருந்ததாகவும், பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில், பேருந்தில் இருந்தவர்கள் பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா நகரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நடந்த இடமான ஈராக்கில் ஆண்டுதோறும் சுமார் 17,000 பேர் சாலை விபத்தில் இறப்பதாகவும், இது உலகின் மிக மோசமான போக்குவரத்து பகுதி எனவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கரையும் வங்கதேசப் போர் கதை? இந்தியாவை கௌரவிக்கும் நினைவுச் சின்னங்கள் என்ன ஆகும்?